Published : 26 Jul 2017 09:09 am

Updated : 26 Jul 2017 10:53 am

 

Published : 26 Jul 2017 09:09 AM
Last Updated : 26 Jul 2017 10:53 AM

புது கேம்ஸ்.. புது ஆப்ஸ்..கனவுகளை நனவாக்கும் ரிஷிகுமார்!

நான்கு அடி உயரத்தில், 1,118 பாகங்களைச் சேர்த்து உருவாக்கிய அந்த ரோபோ, ஆடச் சொன்னால் ஆடுகிறது; பாடச் சொன்னால் பாடுகிறது. ‘கைகொடு, திரும்பு, பின்னோக்கி நட, ஓடு’ என நாம் எது சொன்னாலும் அதை அப்படியே செய்கிறது. இதை உருவாக்கி இருப்பது, படித்துப் பட்டம் வாங்கிய மேதை அல்ல.. பத்தாம் வகுப்புப் படிக்கும் 15 வயது சிறுவன்!

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த அணில்குமார் - பொட்டா தம்பதியின் மகன் ரிஷிகுமார் தான் அந்த இளம் மேதை. விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கிறார் பொட்டா. தனியார் பள்ளியில் யோகா மாஸ்டர் அணில்குமார். வேப்பூர் சத்யசாய் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான் ரிஷிகுமார்.

இவனது பெற்றோரும் மற்றோரும் எதிர்பார்ப்பது, படிப்பில் ரிஷிகுமார் மாநிலத்தின் முதல் மாணவனாக வருவானா என்பதை அல்ல.. வருங்காலத்தில் இவன் இன்னொரு ஐன்ஸ்டீன் ஆவானா? இல்லை இன்னொரு சுந்தர்பிச்சை ஆவனா? என்பதைத்தான்!

அப்படி என்ன சிறப்பு?

இருக்காதா பின்ன? இப்போதே, ரிஷிகுமாரை மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அவிசாஃப்ட் நிறுவனம் வேலைக்கு அழைத்திருக்கிறது. விரும்பினால், எந்த நேரத்திலும் பணியில் சேரலாம் என ரிஷிக்கு ஆஃபர் வைத்திருக்கிறது கூகுள். அப்படி என்னதான் சிறப்பு ரிஷிகுமாரிடம்?

ரிஷிகுமார் சராசரி பிள்ளைகளைப் போல் இல்லை. தெருவில் ஓடியாடித் திரியும் வயதிலேயே கணினியை படித்தவன். இவனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, 4 வருடங்களுக்கு முன்பு இவனுக்கு ஒரு ‘லேப்டாப்’பை இணைய இணைப்புடன் வாங்கித் தந்தார் அருண்குமார். மற்ற பிள்ளைகளைப்போல் அல்லாமல் ‘லேப்டாப்’பை ரிஷிகுமார் வேறு விதமாக பயன்படுத்தினான்.

இணையம் வழியாக ‘கேம்ஸ்’ ஆடிக்கொண்டே இருந்தவன், இந்த ‘கேம்’களை நாமும் ஏன் உருவாக்க முடியாது? என்று சிந்தித்தான். அதற்காக கடுமையாக உழைத்து, புதிய ‘கேம்’களை வடிவமைத்தான்.

அடுத்து, அலைபேசிக்குள் நுழைந்தவன், இதிலுள்ள ‘ஆப்ஸ்’களைப் போல் நம்மால் புதிதாக உருவாக்க முடியாதா? என மூளையை கசக்கினான். பிறகென்ன? இவனது படைப்பில் புதுப் புது ‘ஆப்ஸ்’கள் பிறந்தன.

மூன்று நாளில் உருவான ரோபோ

இப்படி, கடந்த ஓராண்டில் மட்டுமே 30 ‘கேம்ஸ்’களையும் பத்துக்கும் மேற்பட்ட ‘ஆப்ஸ்’களையும் உருவாக்கி இருக்கிறான் ரிஷிகுமார். இவைதவிர, கணினி புரோகிராம்களையும் இவனே புதிது புதிதாக எழுதுகிறான். முறைப்படி படிக்காதபோதும், ஜாவா, சி பிளஸ், சி பிளஸ் - பிளஸ், சி ஹார்ட், ஹெச்.டி.எம்.எல், என 17 புரோகிராம் மொழிகள் ரிஷிக்கு அத்துபடி. இத்தனையும் கடந்து இப்போது ஒரு ரோபோவையும் உருவாக்கிவிட்டான். மனித கட்டளைகளை உள்வாங்கி அதற்கேற்பச் செயல்படும் இந்த ரோபோ, ரிஷிகுமாரின் ஒன்றரை ஆண்டு கால ஆராய்ச்சியில் உருவானது. இதற்கான பாகங்களை அமெரிக்காவிலிருந்து தருவித்து, அவற்றை இணைத்து மூன்றே நாட்களில் ரோபோவை நிறுத்தியிருக்கிறான்.

“இந்த ரோபோ, வீட்டில் தனியாய் இருக்கும் வயதானவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். பாடச் சொன்னால் பாடும், ஜோக் கேட்டால் சொல்லும், ஆடச் சொன்னால் ஆடும், யோகா சொல்லித்தரும், கராத்தே கற்றுக்கொடுக்கும். இதை, சென்னையில் உள்ள அவிசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்து வெளியிட இருக்கிறோம். இதையே இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி, நமது ராணுவ பயன்பாட்டுக்குப் பயன்படும் வகையில் உருவாக்கவும் திட்டமிடுகிறேன்.” பெருத்த நம்பிக்கையோடு சொல்கிறான் ரிஷிகுமார்.

ரிஷிகுமாரின் ‘ஆப்ஸ்’ மற்றும் ‘கேம்ஸ்’களுக்கு கூகுள் நிறுவனம் ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இவனது திறமைக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் தர தயார் என்கிறது எலெக்ட்ரோநைட் நிறுவனம். 2014-ல் ‘பெஸ்ட் கேம் ஆஃப் தி இயர்’ விருது, 2016-ல் ‘தி யெங்கஸ்ட் ஆப்ஸ் டெவலப்பர்’ விருது ஆகியவற்றால் கவுரவிக்கப்பட்டிருக்கிறான் இந்த மேதை. மானசா இண்டர் நேஷனல் ‘ஐ க்யூ’ டெஸ்ட்டில் 10 நிமிடத்தில் 60 கேள்விகளுக்கு விடையளித்ததன் அடிப்படையில் இவனது ‘ஐ க்யூ’ லெவல் 192 எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டு உருவாக்கணும்

“இதையெல்லாம் விட, இன்னும் பெருசா சாதிக்கணும் சார். உலகத்தின் மிகச் சிறந்த ‘பிரவுசர்’ ஒன்றை புதுசா உருவாக்கணும். ‘போகிமன் கோ’வைவிடச் சிறந்த ‘கேம்ஸை’ உருவாக்கணும். நான் தொடங்கியுள்ள ‘ரோபோநாட்டிக்ஸ்’ நிறுவனத்தை உலகப் பிரபலமாக்கணும். அதன் மூலமா, ‘ஹோவர் போர்டு’ என்ற பறக்கும் தட்டை உருவாக்கி போக்குவரத்துக்கு விடணும். அதுபோல, பறக்கும் ரோபோக்களையும் உருவாக்கணும்” என மிரளவைக்கிறான் இந்த குட்டி விஞ்ஞானி.

“இவ்வளவு அறிவான பிள்ளைக்கு நான் ஒரு சிறந்த அம்மாவாக இல்லையே” எனச் சொல்லி கண்கலங்குகிறார் ரிஷியின் அம்மா பொட்டா. தனது பணிச்சுமையால் மகனுக்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாததையும் அவனுக்கு பிடித்ததைக்கூட சமைத்துத்தர முடியாததையும் சொல்லும்போது பொட்டாவுக்கு கண்ணீர் பொங்குகிறது. அம்மாவின் அடிமனத்து உணர்வை அங்கீகரிக்கும் விதமாக அவரது கைகளை ஆறுதலாக பற்றி சமாதானம் சொல்கிறான் அன்பு மகன் ரிஷிகுமார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author