Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM

சிதையும் சமணர் படுகைகள் பாதுகாக்கப்படுமா?- கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று பொக்கிஷம்

செஞ்சி அருகே ஆனத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சமணப் படுகைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ரமேஷ் நம்மிடம் கூறியதாவது:

முற்காலத்தில் வாழ்ந்த சமண முனிவர்கள் மலைக் குகைகளை தங்கள் வாழிடமாகக்கொண்டிருந்தனர். தவத்துக்கு ஏற்ற தனிமையும், நிர்வாணக் கோலத்தில் இருப்பதற்கும் அதுபோன்ற இடங்கள் அவர்களுக்கு உகந்தவையாக இருந்தன. மலைகள் சூழ்ந்த இயற்கை பகுதிகளில், சராசரி மக்களிடம் இருந்து விலகி துறவறம் மேற்கொள்ள மலை குகைகளையே சமண முனிவர்கள் தேர்வு செய்து வந்துள்ளனர்.

முதலில் கரடு முரடான பகுதிகளில் தங்கியவர்கள் பின்னர் தங்களுக்காக பாறைகளில் படுகைகளையும், இருக்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

சமணர்கள் அதிகம் இருந்த பகுதிகளை பஞ்சபாண்டவர் மலை, ஐவர் மலை என அழைக்கப்பட்டன. மதுரையில் கி.மு. 3-ம் நூற்றாண்டில் சமணம் வளர்ச்சி பெற்றிருந்தது. அதன் பிறகு அங்கு அது வீழ்ச்சியை சந்தித்தபோதும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமணம் எழுச்சி பெற்றிருந்தது.

இக்காலக் கட்டத்தில் சமணர்கள் செஞ்சி அருகே உள்ள தொண்டூர், எண்ணாயிரம், மேல்காரணை, கஞ்சியூர், தளவானூர், பழையனூர், சிறுகடம்பூர், ஆனத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழ்ந்துள்ளனர்.

இதற்கு ஆதாரங்களாக சமணர் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செஞ்சிக்கோட்டையிலும் சமணப் படுகைகள் காணப்படுகின்றன.

பாதுகாக்கப்பட வேண்டிய இப்படுகைகளில் அதன் வரலாற்று உண்மை புரியாமல் பலர் தங்கள் பெயர்களை கிறுக்கி வைத்து பெயிண்ட்டால் அலங்கோலப்படுத்தியுள்ளனர். அதன் தொன்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

மேலும் இதுபோன்ற சமணப் படுக்கைகள் உள்ள மலைகள் கல் குவாரிகளாக மாற்றப்பட்டு ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டு வருகின்றன. மிச்சம் உள்ளதையாவது தொல்லியில் துறையினர் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x