Last Updated : 16 Feb, 2017 10:02 AM

 

Published : 16 Feb 2017 10:02 AM
Last Updated : 16 Feb 2017 10:02 AM

அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது!- சுப்பிரமணியன் சுவாமி

5 கேள்விகள் 5 பதில்கள்: சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு வித்திட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு, சசிகலா - பன்னீர்செல்வம் அதிகாரச் சண்டை, அதிமுகவின் எதிர்காலம் என்று எல்லாக் கேள்விகள் தொடர்பிலும் பதில் அளித்தார்.

தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நியாயம் கேட்டு நான் தொடுத்த வழக்கில் விரும்பிய தீர்ப்பு கிடைத்திருக்கிறது. மேல்முறையீட்டுக்குப் போக முடியாது. சீராய்வு மனு அளிக்கலாம். தீர்ப்பில் சட்டரீதியிலான தவறு இருந்தால், அதைச் சுட்டிக்காட்டலாம். ஆனால், திறமையான வழக்கறிஞரை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கறிஞர் செய்த ஒரு தவறால்தான் கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் தொடர்ச்சியை உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அவர் பெற முடியாமல் போய்விட்டது.

அது எப்படி எல்லோரும் சசிகலாவை எதிர்த்தபோது நீங்கள் மட்டும், சசிகலாவை முதல்வர் ஆக்க வேண்டும் என்றீர்கள்?

எனக்கு சட்டம் முக்கியம். சட்டப்படி அவருக்குப் பெரும்பான்மை இருந்தது, அதனால் கூறினேன். தீர்ப்பு வரை காத்திருப்பது என்றெல்லாம் சொல்லி அவர் முதல்வராகும் உரிமையைப் பறிப்பது சரியல்ல. தண்டனை கிடைத்தால் ராஜினாமா செய்திருக்கப்போகிறார். இதே போன்ற சூழலில்தான் ஜெயலலிதா இரு முறை முதல்வர் பதவியேற்றிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்!

பன்னீர்செல்வத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பன்னீர்செல்வம் ஒரு மோசமான மனிதர். முதுகெலும்பற்றவர். ‘நிர்ப்பந்தம் காரணமாக ராஜினாமா செய்தேன்’ என்பவர் அன்றே அதை ஆளுநரிடம் சொல்வதற்கு என்ன? அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட அவருக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவல் சட்டப்படி பதவி இழப்பார்கள்.

சசிகலாவுக்கு எதிராகவும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் பாஜக பின்னிருந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறதே?

அபத்தம். சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்படவும் முடியாது; அதற்கான தேவையும் இல்லை. இந்த விவகாரத்தில் இரு மத்திய அமைச்சர்கள் தொடர்பாகச் சொல்லப்படும் புகார்களும்கூட அவர்களுடைய தனிப்பட்ட செயல்பாடு சார்ந்ததே தவிர, எங்கள் கட்சிக்கு இதில் சம்பந்தம் இல்லை.

சசிகலா, அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்?

இந்த ஒரு வாரத்தில் தான் ஒரு சிறந்த அரசியல்வாதி என்று சசிகலா நிரூபித்திருக்கிறார். பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சமின்றிப் பேசினார். கேள்விகளுக்கு நிதானமாக யோசித்துப் பதில் அளித்தார். சட்டசபை உறுப்பினர்கள் அவர் பிடியில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, காவல் ஆணையர் மற்றும் பத்திரிகையாளர்களை உள்ளே அழைத்துச் சென்று காட்டி பொய் என்று நிரூபித்தார். சசிகலா சிறை சென்றுவிட்டாலும் அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கர்நாடகச் சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு அவரை மாற்ற கட்சியினர் மனு அளிக்கலாம். அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் சிறையில் அவரைச் சந்தித்து, ஆலோசனைகளைப் பெற்று கட்சியை நடத்துவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. அவருடைய ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் போதிய அளவுக்கான பலம் இருக்கிறது. அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x