Published : 06 Oct 2014 08:19 PM
Last Updated : 06 Oct 2014 08:19 PM

மாற்று சிந்தனையை உருவாக்கும் நாளிதழ்: பேராசிரியர் ந.மணிமேகலை

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழகத்தின் மாநகரங்களில் நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரியைத் தொடர்ந்து திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள புனித வளனார் கல்லூரி (செயின்ட் ஜோசப் கல்லூரி) ஜூப்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ந.மணிமேகலை பேசியபோது, "மக்களிடையே மாற்று சிந்தனையை உருவாக்கும் நாளிதழாக 'தி இந்து' தமிழ் விளங்குகிறது. நடுப்பக்க கட்டுரைகள் மாணவ, மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். மக்களை வித்தியாசமாக சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்தி குறித்தும் ஆய்வு மனப்பான்மையை 'தி இந்து' தமிழ் வளர்க்கிறது என்றால் அது மிகையல்ல.

சினிமா செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சற்று குறைத்துக் கொள்ளலாம். இளமை- புதுமை இணைப்பில் நடுத்தர மற்றும் வசதியான இளைய சமுதாயத்துக்கு தேவையான விஷயங்கள் அதிக அளவில் வருகின்றன. இளைய சமுதாயத்தினர் செல்போன் மற்றும் மடிக்கணினியில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதை மாற்றி இளைய தலைமுறையினரிடத்தே சமுதாயத்துக்கு அவர்கள் ஆற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது என்பதை உணர்த்தும் விஷயங்களை இதில் உள்ளடக்கலாம். வாரந்தோறும் மாணவர்கள், பேராசிரியர்களின் கலந்துரையாடல்களை இந்த பகுதியில் வெளியிடலாம். மாணவ, மாணவியரின் படைப்புகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை இதில் வெளியிட வேண்டும்.

ஊடகம் என்பது சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இதில் பல விஷயங்களை சமுதாயத்துக்கு கொண்டு சேர்க்க முடியும். பெண்களுக்கான பகுதியில் சாதனை செய்துள்ள சாமானிய பெண்கள் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட வேண்டும். சொந்த வீடு பகுதியில், சொந்த வீடு இல்லாத 80 சதவீதம் பேர்களுக்கும் பயன்படும் வகையிலான தகவல்களை வெளியிட வேண்டும். தமிழை பிழை இல்லாமல் எழுதுவதே இந்த காலத்தில் சவாலாக உள்ளது. ஆகையால், நல்ல தமிழையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பும் ஊடகங்களுக்கு உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x