Last Updated : 05 Jan, 2014 12:00 AM

 

Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

நீர்நிலை கபளீகரம்: கவலையில் விவசாயிகள்!

கோவை எட்டிமடை அருகே குட்டையை தூர்வாரி விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில், அனுமதியை மீறி, கிராவல் மண் வியாபாரம் நடந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தும் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

கோவை மாவட்டம், தெற்கு வட்டம், மதுக்கரையை அடுத்துள்ளது எட்டிமடை பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சி.க.புதூர் உப்புக்கண்டி என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2 ஏக்கர் 30 சென்ட் அளவில் குட்டை உள்ளது. சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ள மலையில் இருந்து வரும் நீர், இக்குட்டையில் தேங்கி அங்கிருந்து வாளையாறு அணைக்குச் செல்கிறது. முழுவதும் விவசாயம் சார்ந்த அப் பகுதியில் இந்த குட்டை முக்கியமான நீர் நிலையாகவும், மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளத்திற்கு சரியான வழித்தடமாகவும் இருந்து வந்தது.

கடந்த சில வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த இந்தக் குட்டையில் 4 அடுக்குகளில் வண்டல் மண் தேக்கமடைந்துள்ளது.

இது குறித்து கிராம மக்கள் பொதுப்பணித்துறையினரிடம் மனு அளித்து, பின்னர் தூர்வாரும் பணியும் துவங்கியுள்ளது.

இதனிடையே இப்பகுதியில் உள்ள சிலர், தூர்வாரிய வண்டல் மணலை கரை பலப்படுத்தியது போக, மிச்சம் மீதியை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

விவசாயத்திற்குத் தானே கேட்கிறார்கள் என பொதுப்பணித்துறையினரும் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்துள்ளனர். மேற்கொண்டு காலநீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காலநீடிப்பு அனுமதியும் முடிந்து, ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனால், இன்னமும் தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். 2 அடியுள்ள வண்டல் மண்ணை எடுப்பதாகக் கூறி, 20 அடியை தாண்டி குவாரி போல தோண்டிவிட்டனர் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

மணல் விற்பனை படுஜோர்

அவர்கள் கூறுகையில், பொதுப்பணித்துறை அளித்த அனுமதியில் குட்டையிலிருந்து 30 மீட்டருக்கு அப்பால் வண்டல் மண் எடுக்க வேண்டும், கரைகளுக்கு சேதம் ஏற்படக் கூடாது. அந்த மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என 8 நிபந்தனைகள் உள்ளன. ஆனால், தற்போது குட்டை இருந்த இடமே தெரியாத வகையில் மணல் குவாரி அமைத்து, படுஜோரான விற்பனையும் நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட்டுகளில் சாலை அமைக்கவும், கட்டுமானப் பணிகளுக்கு இந்த கிராவல் மணல் ஏற்றது என்பதால், பாதி விலைக்கு விற்கப்படுகிறது. இது குறித்து ஆட்சியரிடம் புகார் மனு அளித்தோம். உடனே பகலில் விடுத்து, இரவில் மணல் கடத்தல் ஆரம்பமாகிவிட்டது என்கின்றனர்.

புகார் வந்தால் நடவடிக்கை

சுமார் 2 அடிக்கு வண்டல் மண் எடுக்க கொடுக்கப்பட்ட 15 நாள் அவகாசம் டிச.23ம் தேதியே முடிந்துவிட்டது. ஆனாலும் மணல் எடுக்கிறார்களே என மதுக்கரை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமாரிடம் கேட்டபோது, ஆட்சியருக்கு கொடுத்த புகார், எனக்கு வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தன்னிச்சையாக அங்கு போய் விதிமுறை மீறல் குறித்து கேள்வி கேட்க முடியாது என்றார்.

சட்டப்படி குற்றம்

கோவை தெற்கு தாசில்தார் கூறுகையில், விதிமுறைகள் மீறப்பட்டால் அது சட்டப்படி குற்றம் தான். விவசாயிகளின் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.

அனுமதி கொடுப்பதுடன் அதிகாரிகளின் பணி முடிந்துவிடாது. அதை கண்காணிக்கவும் வேண்டும். ஆட்சியருக்கு கொடுத்த மனுவுக்கும் பதில் இல்லை. அதிகாரிகளும் கவனிப்பதில்லை. இருந்த ஒரே ஒரு நீர்நிலையும் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது என வேதனையில் புலம்புகின்றனர் விவசாயிகள்.

சமீபத்தில் கோவை குறிச்சி குளத்தில் தூர்வாருகிறோம் என்ற பெயரில், கிராவல் மண் கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x