Published : 04 Apr 2017 08:12 AM
Last Updated : 04 Apr 2017 08:12 AM

வறட்சியிலும் தேவையா வரிச்சலுகை?- அநாவசிய ஒதுக்கீடுகளை விவசாயம் நோக்கி திருப்புங்கள்

மாநிலம்தான் இந்திய நாட்டின் அடிப்படைக் கூறு. மாநில அரசுகள்தான் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவை. அவர்களது தேவை அறிந்து உடனுக்குடன் செயல் படும் பொறுப்பும் மாநில அரசுக்கே அதிகம். ஆனால், மாநிலங்கள் இந்தப் பொறுப்போடு செயல்படுகிறதா? தன்னிடம் உள்ள நிதியைக் கையாளுவதில் மாநில அரசுகள் காட்டும் மெத்தனமும் பொறுப்பற்ற தன்மையும் அதிர்ச்சி தருகின்றன. அநேகமாக இந்தியாவில் எந்த மாநில அரசும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மாநில அரசுகள் தமது வருவாயை 2 விதங்களில் வீணாக்குகின்றன. வரி வருவாயை உற்பத்தி சாரா, திட்டம் சாரா செலவினங்களில் வீணாக்குவது ஒரு வகை. இதில் இருந்து விலகி இருந்தாலே பல ஆயிரம் கோடிகள் மிச்சமாகும்.

தமக்கு வரவேண்டிய வரி வருவாயை ‘துறந்து விடுவது’ மற்றொரு வகை. உதாரணத்துக்கு, தமிழக அரசு அளிக்கும் ‘கேளிக்கை வரி விலக்கு’. திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வை த்தால் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை 2006 ஜூலையில் இருந்து அமலில் உள்ளது. இதனால், 2009-ம் ஆண்டில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.50 கோடி. அதன் பிறகு, படங்கள் பெருகிவிட்ட நிலையில், தற்போது வரி இழப்பு எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எதற்காக இந்த விலக்கு? இதனால் யாருக்கு என்ன பயன்?

கலைகளுக்கு அரசு ஆதரவு அளித்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. அதேநேரம், ‘கேளிக்கை’ என்று சட்டம் சொல்கிற ஒன்றுக்கு எப்படி ஊக்கம் அளிக்க முடியும்? ஓர் அரசே முன்வந்து கேளிக்கைகளை ஊக்குவிப்பது எந்த வகையில் நியாயம்?

தவிர, கேளிக்கை வரி விலக்கின் பயன் யாரைச் சென்று சேர்கிறது என்று பார்க்கவேண்டும். கேளிக்கை வரி விலக்கின் பயன் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமை யாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ல் வலுவாக வாதிடப்பட்டது. ஆனால், மக் களுக்கே முழுப் பயனும் சேரவேண்டும் என்று நீதி பதி மகாதேவன் உறுதியாகத் தீர்ப்பு அளித்தார்.

ஆனாலும், பல திரையரங்குகளில் இந்த வரிவிலக்குச் சலுகை பார்வையாளர்களுக்கு திருப்பித் தரப்படுவதில்லை. வழக்கம்போல, அதிக கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

முறையாக வரி செலுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்து வசூலிப்பதுதான் வரித்துறையின் கடமை. இங்கு நிலைமை வேறு. கேளிக்கை வரி விலக்கையும் அளித்து, அதன் பயன் உரியவர் களுக்குப் போய்ச் சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பணியும் சேர்ந்துகொள் கிறது. போதாக்குறைக்கு ‘டாஸ்மாக்’ வருமான மும் கடுமையாக சரிந்துள்ளது. (நல்லதுதான்!) இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் கேளிக்கை வரி விலக்கு மட்டும் தடங்கல் இல்லாமல் தொடர்கிறது.

தனியார் நிறுவனங்கள் தங்களது வருமானத் தில் தொய்வு வருகிறது என்று தெரிந்தால், அடுத்த கணமே, தமது ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிகள், வசதிகளை திரும்பப் பெற்றுவிடும். ஆனால் மிகக் கடுமையான நிதி நெருக்கடி என்று உணர்ந்த பிறகும், தாராளமாக வழங்கப்பட்டுவரும் வரிச் சலுகைகளை அரசு ஏன் திரும்பப் பெற முயற்சிக்கவில்லை?

இத்தனைக்கும் ஒரே ஓர் அரசாணை போதும். அந்த நாளில் இருந்தே வரி வருவாய் கூடும். ஆனாலும், அதற்கான முயற்சிகள் இல்லை.

கோடிகளை இழக்கும் அரசு

தமிழகம் மொத்தமும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ளது. பாசனத்துக்கு மட்டுமல் லாது, குடிநீருக்கும் மிகுந்த அல்லல்பட்டுக் கொண் டிருக்கிறோம். விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. மின் தட்டுப்பாடு என்கிற அபாயம் தலைக்கு மேல் தொங்குகிறது. வாழ்வாதாரம் வேண்டித் தவிக்கிறார்கள் ஒரு பிரிவினர். தரப்பட்ட நிவாரணம் போதாது; மேலும் வேண்டும் என்று உண்ணாவிரதம், ஊர்வலம், மறியல், வேலைநிறுத்தம் என்று மாநிலமே அல்லோலப்படுகிறது. அரசின் நிதி நிலைமை படுபாதாளத்தில் உள்ளது. ஆனாலும், கேளிக்கைக்கு வரி விலக்கு அளித்து சில நூறு கோடிகளை இழந்துகொண்டு இருக்கிறது அரசு.

குறைந்தபட்சம் நிலைமை சீராகும் வரையாவது கேளிக்கை வரி விலக்கை விலக்கிக் கொள்ளலாமே. ‘வரி விலக்கு இருந்தால்தான் படத்தை திரையிடுவோம்’ என்று ‘உரிமை’ கோருபவர்கள் அதுவரை வெளியீட்டை தள்ளிப் போட்டுக் கொள்ளட்டும். பொதுமக்களுக்கு எந்தத் தீங்கும் வரப்போவதில்லை.

கடந்த வாரம் வெளியாகி ‘சுமார்’ என்பதில் இருந்து ‘மோசம்’ என்பது வரை விமர்சிக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம் ‘திருப்திகரமான’ வசூல் பெற்றிருப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவிக்கிறது. மிகச் சுமாரான ஒரு படத்துக்காக ஒரு வாரத்தில் சுமார் ரூ.3 கோடியை நம் மக்கள் வீண் செலவு செய்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் நமது உறவுகள், சொந்தங்கள், நமக்கு உணவு வாயிலாக உயிரைத் தருகிறவர்கள், நிவாரணம் கேட்டு வீதியில் அமர்ந்திருக்கின்றனர்.

கேளிக்கை வரியை மீண்டும் கொண்டுவரு வதன்மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் அப்படியே விவசாயிகளின் நலன்களுக்குத் திருப்பிவிடலாம். கணிசமான நிவாரணம், நம் விவ சாயத் தோழர்களுக்கும் உடனடியாக கிடைக்கும்.

விவசாய நிதியம்

திரைப்படங்கள், மது விற்பனை ஆகியவற்றின் மீது சிறப்பு வரி (‘செஸ்’) விதிக்கப்பட்டு, அதில் வரும் வருமானத்தில் ‘விவசாய நிதியம்’ ஏற்படுத்த லாம். கேளிக்கைகளுக்கு செய்யும் செலவை விவ சாய நலனுக்குத் தரமாட்டார்களா? தருவார்கள். ஆனால், அது கேட்பவர்களின் நம்பகத்தன்மை யைப் பொருத்திருக்கிறது. பொதுநிதி என்றாலே கையாடலும் இருக்கத்தான் செய்யும் என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. அதுதான் மிகப்பெரிய பிரச்சினை.

‘நிதி ஒழுங்கு’ (Fiscal Discipline) என்ற சொல் இப்போதெல்லாம் அடிக்கடி விவாதிக்கப்படு கிறது. தன் வசம் உள்ள நிதியை, சரியான காரணங்களுக்காக, சரியான அளவில், சரியான வழியில் செலவிடுவதை உறுதி செய்வதுதான் ‘நிதி ஒழுங்கு’ கோட்பாடு. இதுகுறித்து எந்த மாநில அரசாவது, எப்போதாவது அக்கறை கொண்டு செயல்படுகிறதா?

ஆத்திர அவசரத்துக்கு நிதியில்லை

சுனாமி நிகழ்ந்த 2004 முதற்கொண்டே தமிழகம் ஏதாவது ஒரு அசாதாரண சூழலை அநேகமாக ஒவ்வோர் ஆண்டுமே எதிர்கொண்டு வருகிறது. ‘எதிர்பாராத பேரிடர்’ என்பதே தமிழகத்தில் இயல்பான ஒன்றாக மாறிவருகிறது. சாமானியருக்கும்கூட இந்த நிலை புரிகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது, மாநில அரசு இன்னமும்கூட தனது கவனத்தை இந்தத் திசையில் திருப்பியதாகத் தெரியவில்லை.

கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை பளிச்செனத் தெரியும். பேரிடர் அல்லது அசாதாரண சூழல் ஏற்பட்டால் அடுத்த நாளே மாநில அரசு, ‘உடனடி நிவாரணம்’ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? இதுபோன்ற தருணங்களில் உடனடி தேவைக்குக்கூட நம்மிடம் நிதி இல்லை!

ஒரு குடும்பத்தில் மிக சொற்ப வருமானம் உள்ளவர்கள்கூட ‘ஆத்திர, அவசரத்துக்கு வேணும்’ என்று சேமிப்பதைப் பார்க்கிறோம். ஒரு மாநில அரசு அப்படி எதுவும் வைத்துக் கொள்ளாததை என்னவென்று சொல்வது?

தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்களை சகட்டு மேனிக்கு எப்படியும் செலவு செய்துகொள்ளலாம் என்பதா மாநில அரசுகளின் உரிமை?

இதை மாநில அரசுகள் உணர்ந்து, காலத்துக் கேற்ற மாற்றங்களை செயல்படுத்தியாக வேண்டிய அவசிய, அவசரம் தற்போது எழுந்துள்ளது. எங்கெல்லாம் தற்போதைக்கு நிதி தேவைப்படவில்லையோ, அதையெல்லாம் விவசாயத்துக்கும், குடிநீர் வழங்கலுக்கும் மடைமாற்றி, பிரச்சினையை உண்மையுடன் எதிர்கொள்வதுதான் உடனடி தேவை.

இத்துடன், மத்திய அரசும் இயன்றவரை தாராளமாக நிதி நிவாரணம் அளித்து உதவினால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர முடியும்.

ஆபத்தில் இருந்து மக்களைக் காப் பாற்றுவதை விடவும், நிதி இருப்பு, நிதித் திட்டமிடலுக்கு வேறு என்ன பயன் இருந்துவிடப் போகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x