Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM

தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் 4 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் நேற்று பாஜகவில் இணைந்தனர்.

ஆந்திராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 23-ஐ மட்டுமே அந்த கட்சி கைப்பற்றியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசத்துக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 22 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.ஜி. வெங்கடேஷ், சி.எம். ரமேஷ், சுஜனா சவுத்ரி, காரிகாபதி மோகன் ராவ் ஆகியோர் பாஜகவுக்கு அணி மாறியுள்ளனர். டெல்லியில் உள்ள பாஜகதலைமை அலுவலகத்தில் கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 4 பேரும் நேற்று அந்த கட்சியில் இணைந்தனர்.

மேலும் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை சந்தித்து 4 எம்.பி.க்களும்மனு அளித்தனர். அதில், "தெலுங்குதேசம் மாநிலங்களவை கட்சியை பாஜகவில் இணைக்கவேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இது தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி, மற்றொரு கட்சியில் இணைந்தால் அவரது பதவி பறிபோகும். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் மற்றொரு கட்சிக்கு அணி மாறினால் அது கட்சி பிளவாகக் கருதப்படும். அந்த எம்.பி.க்களின் பதவி பறிபோகாது.

மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 4 எம்.பி.க்கள் அணி மாறியிருப்பதால் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்.

மாநிலங்களவையின் 245 இடங்களில் பாஜக கூட்டணிக்கு 102 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். தெலுங்கு தேசம் எம்.பி.க்களின் வரவால் ஆளும் கூட்டணியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் கட்சியை பலவீனப்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x