Published : 18 Jun 2019 12:21 PM
Last Updated : 18 Jun 2019 12:21 PM
தமிழக - கேரளா மாநிலங்களின் அரசியல் ஆளுமைகளால் முன்னெடுக்கப்பட்டு, தமிழகப் பொறியாளர்களின் மதிநுட்பத்தாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும், உயிர்த் தியாகத்தாலும் உருவாக்கப்பட்ட பிஏபி திட்டத்தின் நோக்கம் தற்போது முழுமை பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு, ‘இல்லை’ என்ற பதிலை முன்வைக்கின்றனர் பிஏபி விவசாயிகள்.
பிஏபி திட்டத்தில் ஆழியாறு, பாலாறு ஆகிய இரு ஆற்றுப் படுகைகளில் உள்ள 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, 30.50 டிஎம்சி தண்ணீரைப் பகிர்ந்து அளிப்பதே பிஏபி திட்டத்தின் பிரதான நோக்கம். 1975-ம் ஆண்டு வரை 2 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெற்றன.
பாசனப் பரப்பு விரிவாக்கம்!
பிஏபி திட்டம் தொடங்கியது முதல், 1975-ம்ஆண்டு வரை அதன் பாசனப் பரப்புகள் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
அவற்றுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பாசன வசதி கிடைத்து வந்தது. இந்நிலையில் 1971-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ‘கொங்கு மண்டலத்தில் பிஏபி பாசன பரப்பை விரிவாக்குவோம்’ என்ற வாக்குறுதியுடன் தேர்தலை சந்தித்த திமுக வேட்பாளர்கள், வெற்றி பெற்றனர். தமிழகத்தில் திமுகவும் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து 1975 மார்ச் 25-ம் தேதி அரசாணை (எண் பொ.ப.து. 450/75) வெளியிட்டது. இதன்படி, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் புதிதாக 88 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இணைத்து பிஏபி திட்டத்தை விரிவாக்கியது அப்போதைய திமுக அரசு.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மேலும் புதிதாக 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, ஏற்கெனவே பிஏபி திட்டத்தில் 88 ஆயிரம் ஏக்கர் விரிவாக்கம் செய்து வெளியிட்ட அரசாணையை ரத்து செய்த திமுக அரசு, புதிய அரசாணையை (எண் பொ.ப.து 1234/75) வெளியிட்டது. அதில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் விஸ்தரிப்பு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு பிறகு அந்த அரசாணையையும் ரத்து செய்தது. இன்னும் கூடுதலாக 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் இணைத்து, பிஏபி பாசனப் பரப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக விரிவாக்கம் செய்யப்படுவதாக மேலும் ஒரு அரசாணையை (எண் பொ.ப.து. 126 / 76) 1976-ம்
ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி வெளியிட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அசு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் விரிவாக்கம் செய்யும் அரசாணைக்கு அங்கீகாரம் அளித்தது. இது தொடர்பாக 1978-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி புதிய அரசாணை (எண் 518 / 78) வெளியிடப்பட்டது.
நீதிமன்றம் சென்ற விவகாரம்!
இதை எதிர்த்தும், பிஏபி திட்டத்திலிருந்து, புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பிஏபி ஒரிஜினல் ஆயக்கட்டுதாரர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்கு முன்னரே , 1982-ல் அதிமுக அரசு பிஏபி திட்டத்தில் மேலும் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பாசன விரிவாக்கம் செய்து அரசாணை (எண் பொ.ப.து. 175/82) வெளியிட்டது.
பிஏபி பாசனப் பரப்பு விரிவாக்கத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், 1983-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் விஸ்தரிப்பு இல்லாத பாசனப் பரப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள 3 மண்டல முறைப்படி நீர் வழங்கியதுபோக, மீதமுள்ள நீரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பாசனப் பரப்புகளுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் முறைப்படுத்துதல் சட்டம்!
அதிமுக அரசு 1984-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பிஏபி திட்டத்தில் மீண்டும் ஒரு பாசனப் பரப்பு விஸ்தரிப்பை மேற்கொண்டது. அதில், அன்றைய ஈரோடு மாவட்டம் காங்கயம் பகுதியில் இருந்த 35 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்புகளை பிஏபி திட்டத்தில் இணைத்து அரசாணை (எண் பொ.ப.து. 1903/84) வெளியிட்டது.
பிஏபி திட்டத்தில் விரிவாக்கம் செய்த பாசனப் பரப்புகளில் 85 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், அன்றைய காங்கயம், வெள்ளகோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்தன. உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, விஸ்தரிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால், அந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலித்த, ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு , வெள்ளகோயில், காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிஏபி திட்டத்தில் பாசனப் பரப்பு விஸ்தரிப்பு செய்யப்பட்ட 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசனத்துக்கு தண்ணீர் அளிக்கும் வழிமுறைகளை யோசித்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நீக்கினால் மட்டுமே அது சாத்தியம் என்பதால், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி, உயர் நீதிமன்ற உத்தரவை நீக்க, சட்டப்பேரவையில் ‘பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் விநியோகச் சட்டம் (20/1993)’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் தண்ணீர் அளிப்பதை முறைப்படுத்தும் சட்டம், 1994 ஏப்ரல் மாதம் 27-ம் தேதி அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின்படி, பொதுப்பணித் துறை திருமூர்த்தி அணையின் உதவி செயற் பொறியாளர், அணையின் சொந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பாலாறு, காண்டூர்க் கால்வாய்களில் வரும் நீரின் அளவை கணக்கிட்டு, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், காங்கயம், தாராபுரம் பகுதிகளில் மண்டலம் 1-ல் உள்ள 98,558 ஏக்கர் நிலங்கள், மண்டலம் 2-ல் உள்ள 98,418 ஏக்கர் நிலங்கள், மண்டலம் 3-ல் உள்ள 94,024 ஏக்கர் நிலங்கள், மண்டலம் 4-ல் உள்ள 86,152 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 3,77,152 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் அளிப்பதை முறைப்படுத்துவார்.
ஓராண்டுக்கு இரு மண்டலங்களுக்கும் தண்ணீர் திறப்பை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு மண்டலம் என்பது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து, டிசம்பர் 15-ம் தேதி வரையிலும், அடுத்த மண்டலம் டிசம்பர் 16-ம் தேதியிலிருந்து ஏப்ரல் 30-ம் தேதி வரையிலான காலமாகும்.
ஒருவேளை பருவமழை பொய்த்து, அணையில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டால், பின்னர் தண்ணீர் திறக்கும் சூழல் ஏற்படும்போது, முதலில் நிறுத்தப்பட்ட மண்டலத்துக்கு தண்ணீர் விட்ட பின்னரே, சுழற்சி முறையில் அடுத்த மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வரையறைகள், தண்ணீர் அளிப்பதை முறைப்படுத்துதல், தண்ணீரைச் சேமித்து வைத்தல், 4 மண்டலங்களுக்கும், பழைய ஆயக்கட்டுகளுக்கும் தண்ணீரை அளித்தல் ஆகிய சாராம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
பிஏபி பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT