Published : 15 Mar 2018 10:12 AM
Last Updated : 15 Mar 2018 10:12 AM

வைகை கரையோரத்தில் ரூ.30 கோடியில் பாதாள சாக்கடை: 40 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் பணி தொடக்கம்

மதுரை வைகை ஆற்றில் வடகரை, தென் கரை பகுதிகளில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் அடைக்கப்பட்டு ரூ.30 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை குறைந்துவிட்டதால், வைகை ஆற்றில் நீரோட்டம் முற்றிலுமாக இல்லை என்ற அளவுக்கு வறட்சி நிலவுகிறது. வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீரும், பெரும்பாலும் குடிநீர் ஆதாரமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலத்துக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் ஒரு போக சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றிலும் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது மீண்டும் வைகை ஆறு வறண்டுவிட்டது. நீரோட்டம் இல்லாததால், ஆற்றின் வழித்தடங்களை பொதுப்பணித்துறை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்கவில்லை. அதனால், ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமானது. தனியார் நிறுவனங்கள் கழிவுநீரை ஆற்றில் திறந்துவிட்டன.

மதுரை மாநகராட்சியில் வைகை வடகரை, தென்கரை பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால், தடையின்றி ஆற்றில் கழிவு நீர் திறந்து விடப்பட்டது. அருள்தாஸ்புரம், இஸ்மாயில்புரம், ஏவி. மேம்பாலம் அருகே கள்ளழகர் ஆற்றில் இறக்கும் பகுதி உட்பட மொத்தம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் ஆற்றில் கலந்தது. அதனால், வைகை ஆறு, சென்னை கூவம் நதி போல் மாசடைந்துள்ளது.

சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ அமைப்புகளின் தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கைகளை ஏற்று, தற்போது மாநகராட்சி நிர்வாகம் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி உள்ளது. முதற்கட்டமாக ஆற்றில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டது. அதற்கு அடுத்து ஆற்றின் கரையோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவது தடுக்கப்பட்டது. அப்பகுதியில் வசிப்போருக்கு தனிநபர் கழிப்பறை, பொதுக்கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜவகர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தில் மாநகராட்சி சார்பில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.30 கோடியில் வைகை வடகரை மற்றும் தென்கரை பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக வைகையோரத்தில் அமைந்துள்ள இஸ்மாயில்புரத்தில் ஆற்றில் கழிவு நீர் கலக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து அதில் இந்த கழிவு நீரை அனுப்பும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அருள்தாஸ்புரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது: வைகை வடகரை, தென்கரையையொட்டி உள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை வசதியில்லை. அதனால், இப்பகுதியில் நேரடியாக கழிவு நீர் வைகை ஆற்றில் விடப்பட்டது. தற்போது இப்பகுதிகளில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் தடுக்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படும் பாதாள சாக்கடை மூலம் தத்தேனேரி பம்பிங் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாநகராட்சியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. விரைவில், இவை அனைத்தும் தடுக்கப்பட்டு, கழிவுநீரின்றி ஆற்றை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.93 கோடியில் வைகை ஆற்றின் கரைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x