Published : 03 Apr 2019 07:06 PM
Last Updated : 03 Apr 2019 07:06 PM
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது கட்சி அலுவலகத்துக்கு நிர்வாகிகளுடன் வரும்போதெல்லாம் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக சாலையை ஆக்கி ரமித்து நிறுத்துவதால் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
மதுரை மாநகர அதிமுக அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே பனகல் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் மிகுந்த இட நெருக்கடியில் ‘பார்க்கிங்’ வசதியே இல்லாமல் உள்ளது. அதனால், மாநகர அதிமுக அலுவலகத்துக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிர்வாகிகளுடன் வரும்போது அவர் மற்றும் அவரது நிர்வாகிகள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அரசு மருத்துவமனை அருகே பனகல் சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.
பனகல் சாலையில் இயல்பாகவே போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறுகலான சாலையும்கூட. வாகனங்களை அடுத்தடுத்து சாலையோரம், குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதால் இந்தச் சாலையின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து விடுகிறது. அமைச்சரும், அவரது நிர்வாகிகளும் வானகங்களை எடுத்துச் செல்லும் வரை இந்தப் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. அமைச்சருடன் வருவதால் அதிமுகவினர் இந்தச் சாலையில் எந்த இடத்தில் அவர்கள் வாகனங்களை நிறுத்தினாலும் போலீஸாரால் அவர்களை தட்டிக் கேட்க முடியவில்லை.
முடிந்தளவு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தப் பார்க்கின்றனர். இல்லாவிட்டால் போக்குவரத்தை மாற்றி விடுகின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அடிக்கடி பனகல் சாலையில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கிறார். கட்சி நிர்வாகிகளும் அவருடன் வருகின்றனர். அதனால், பனகல் சாலையில் அடிக்கடி நெரிசல் ஏற்படுவதால் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், பொதுமக்கள் இந்தச் சாலையைக் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
அமைச்சரின் கவனத்துக்கு சென்றதா?
மக்கள் அவதியடைகிறார்களே என்று அதிமுகவினரும், போலீஸாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை பொருத்தவரையில் அவரது கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு செல்லு ம்பட்சத்தில் அவர் இந்த நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார். ஆனால், போலீஸார் அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லத் தயங்குகின்றனர். அதனால், அதிமுகவினர் தாறுமாறாக வாகனங்களை இந்தச் சாலையில் நிறுத்தி பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். இது அமைச்சருக்கும், அவர் சார்ந்த அதிமு கவுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT