Published : 03 Jan 2019 08:19 AM
Last Updated : 03 Jan 2019 08:19 AM
பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான முன்கூட்டியே செலுத்தும் வரியாக ரூ. 699 கோடி செலுத்தியுள்ளார். இது பிளிப்கார்ட் நிறுவனத்தில் தமக்குள்ள பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் கிடைத்த தொகைக்கு செலுத்த வேண்டிய மூலதன ஆதாய வரியாகும்.
இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பின்னி பன்சால் செலுத்திய வரி விவரத்தை வெளியிடவில்லை என்று வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளிப்கார்ட் நிறுவனப் பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் கிடைத்த தொகைக்கு வரி செலுத்துவது தொடர்பாக பங்குதாரர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதேபோன்ற நோட்டீஸை வரித் துறையினர் பிற பங்குதாரர்களுக்கும் அனுப்பியிருந்தனர். கடந்த ஆண்டு வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பங்குகளை வாங்கியதற்காக ரூ. 7,440 கோடி வரித் தொகையை செலுத்தியிருந்தது. இந்நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை 1,500 கோடி டாலருக்கு வாங்கியது. அத்துடன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 46 பங்குதாரர்கள் குறித்த விவரத்தையும் வால்மார்ட் வரித் துறைக்கு அளித்தது. இந்த பரிவர்த்தனை மூலம் இந்த 46 பங்குதாரர்களும் மூலதன ஆதாயம் அடைந்துள்ளனர்.
வால்மார்ட்டுக்கு விற்பனை செய்ததன் மூலம் தனக்குக்கிடைத்த மூலதன ஆதாய விவரத்தை பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் தெரிவிக்கவில்லை. சச்சின் பன்சால் இப்போது செலுத்தியது முன் தேதியிட்ட வரியாகும். அதாவது இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்காக அவர் இத்தொகையை செலுத்தியுள்ளார். பிளிப்கார்ட் நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் நிறுவனமாகும். கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதிக்கு முன்பு வால்மார்ட்டுக்கு விற்கும் வரை இந்நிறுவனத்தில் சாஃப்ட்பேங்க் மற்றும் இ-பே ஆகிய நிறுவனங்கள் பெருமளவு பங்குகளை வைத்திருந்தன. இந்த விற்பனை குறித்து உண்மையான பரிவர்த்தனை விவரங்களை வரித் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT