Published : 04 Jan 2019 11:15 AM
Last Updated : 04 Jan 2019 11:15 AM
கோவை மத்தியசிறையில் துணிப்பை, துண்டு தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. இதை சிறை பஜார் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, அதன் விற்பனையைத் தடுக்க அரசின் நடவடிக்கை தீவிரமடையத் தொடங்கியதால், பொதுமக்களும் துணிப்பை, சணல் பை போன்றவற்றை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கோவை மத்திய சிறையின் கட்டுப்பாட்டின் கீழ் நஞ்சப்பா சாலையில் சிறை பஜார் உள்ளது. இங்கு மத்தியசிறையில் கைதிகளால் தயாரிக்கப்படும் சணல் பை மூன்று வித அளவுகளில் ரூ.80, ரூ.120, ரூ.140 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு எழுந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்து, துணிப்பை தேவை அதிகரித்துள்ளதால், துணிப்பை, சணல் பை விற்பனை செய்யும் கடைகளை தேடித்தேடி மக்கள் வாங்கிச் செல்கின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் கோவை மத்திய சிறையில் துணிப்பை, சணல் பைகளின் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. அதேபோல், துண்டு வகைகளின் உற்பத்தியும் தீவிரமடைந்துள்ளது.
இது குறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் நேற்று கூறியதாவது: கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள நூற்பாலை, கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில்கூடங்கள் மூலம் சிறைக் கைதிகளால் போலீஸாருக்கான காக்கி உடைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. பேக்கிரி பொருட்கள், தேநீர், சணல் பை, பெட்ஷீட், சிறை போலீஸாருக்கு தரை விரிப்புகள், சர்ட் வகை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. தவிர, திறந்தவெளிச்சிறைச்சாலை மூலம் பலவித காய்கறிகள், கீரை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய சிறை கைதிகளுக்கு உணவு தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கும் விற்கப்படுகிறது.
இதன் அடுத்த நகர்வாக மத்திய சிறையில் துணிப்பை, துண்டு கடந்த சில நாட்களாக தயாாிக்கப்பட்டு வருகிறது. துணிப்பைகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு துணிப்பை உற்பத்தி மத்திய சிறையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான துணி சிறை நூற்பாலையில் தயாரிக்கப்பட்டு, டெய்லரிங் தொழில்கூடம் துணிப்பை தயாரிக்கப்படுகிறது. தூய வெள்ளை நிறம், லேசான மஞ்சள் வண்ணம், முழு காக்கி நிறம் ஆகிய மூன்று வகைகளில் துணிப்பை மூன்று வித அளவுகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை 10 வகையான அளவுகளில், சிகப்பு, பச்சை, ரோஜா நிறம், பழுப்பு நிறம் போன்ற பல வண்ணங்களில் கட்டம் போட்ட வடிவம், கட்டமில்லாத பிளைன் வடிவம் ஆகிய வடிவங்களில் துண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான வண்ணம் வெளியே டையிங் யூனிட் மூலம் அளிக்கப்படுகிறது. ஆண்கள் சிறையில் தலா 30 கைதிகள் துண்டு தயாரிப்பு மற்றும் துணிப்பை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த துணிப்பை, துண்டுகளுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஓரிரு தினங்களில் விலை நிர்ணயிக்கப்பட்டு, உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்னர், சிறை பஜாரில் விற்பனைக்காக வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT