இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் திட்டம்!

இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் திட்டம்!
Updated on
3 min read

சாப்பிடும் உணவே நஞ்சாக மாறும் தற்போதைய சூழலில், நமது பாரம்பரிய இயற்கை விவசாயம் மீதான ஆர்வமும், நஞ்சில்லா உணவுப் பொருட்கள் மீதான தேடலும் அதிகரித்து வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் ‘ஆர்கானிக்’ தானியங்கள் காய்கறிகளுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் வழிமுறைகள், `ஆர்கானிக்` காய்கறிகளை சந்தைப்படுத்துவது, இயற்கை விவசாயத்துக்கு அரசு வழங்கும் உதவிகள் தொடர்பாக விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

சர்வதேச அளவில் இயற்கை விவசாயம் மீதான கவனம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய, மாநில அரசுகளும் இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் சுமார் 15 லட்சம் ஹெக்டேரில்,  11 லட்சம் விவசாயிகளால் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனைத்து விதமான உணவுப் பயிர்கள்,  காய்கறிகள்,  பழங்கள், வாசனைத் திரவிய பயிர்கள் அனைத்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை (Paramparagat Krishi Vikas Yojana) 2015 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் வேளாண்மை அலுவலர் வேல்முருகன் கூறும்போது, "இந்த திட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில்,  சாமை, குதிரைவாலி, தினை,  வரகு, ராகி பயிர்களில் முதலாமாண்டு 42 தொகுப்புகள், 2-ம்  ஆண்டில் 61  தொகுப்புகள், 3-ம் ஆண்டில் 150 தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் 5,060 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், மஞ்சள், வாழை, மிளகு, மா உள்ளிட்டவை 3,240  ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வழங்குவதுடன், முன்னோடி விவசாயிகளின் வயல்களை நேரடியாகப்  பார்வையிட  ஏற்பாடு செய்யப்படும். இதனால், சாகுபடி முறைகள், விற்பனை  விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

மேலும், உள்ளூர் குழுவை `பிஜிஎஸ்`என்கிற இணையதளத்தில் பதிவு செய்தல், பதிவு அலுவலகத்தில் சங்கமாக பதிவு செய்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல், மண் மாதிரி எடுத்தல், பகுப்பாய்வு, மண்புழு தயாரித்தல், உள்ளூர் திறனாளிக்கு பயிற்சியளித்தல் உள்ளிட்டவற்றுடன், அங்கக பொருட்காட்சியும் நடத்தப்படும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

முதல் ஆண்டில் நவதானியம், வேஸ்ட் டி-கம்போசர், வேப்பம் புண்ணாக்கு, திரவ உயிர் உரங்கள், திரவ உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், தெளிப்பான், டிரம் வாங்கவும், நிலத்தை சீரமைக்கவும் ஏக்கருக்கு ரூ.4,858, இரண்டாமாண்டில் ரூ.4,000, 3-ம் ஆண்டில் ரூ.3,644 மானியம்  வழங்கப்படுகிறது.

மேலும், விளை பொருட்களை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் இயந்திரங்கள் வாங்கவும், பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வாங்கவும், பேக்கிங் செய்யவும், விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு இரண்டாம் ஆண்டில்  ரூ.10 லட்சம்  வரை நிதி வழங்கப்படுகிறது.  20  ஹெக்டேர் கொண்ட உள்ளூர் குழுவுக்கு 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14.95 லட்சம்  மானியம் வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயிகளின் விவரங்களை `பிஜிஎஸ்` இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், இடுபொருட்கள், மகசூல் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து,  `ஸ்கோப்` சான்றிதழை விவசாயிகளே பதிவிறக்கம் செய்து, விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம்.

ஸ்கோப் சான்றிதழ் என்பது, இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் வயலில், உள்ளூர் குழுவினர் அல்லது வேளாண் துறையினர் ஆய்வு செய்து, இயற்கை விவசாயத்தில் விளைந்த பயிர் என்று வழங்கும் அங்கீகாரச் சான்றிதழாகும். இதனால், இயற்கை விவசாய விளை பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன், விற்பனையும் எளிதாகும்.  நுகர்வோரும் இந்த இணையதளம் மூலம், உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தி விவரங்களை  தெரிந்துகொள்ளலாம்.

மேலும், விவசாயிகளின் வயலில் இடுபொருட்களைத் தயாரித்து, சுயசார்பு அடையவும் வலியுறுத்தப்படுகிறது. இதனால், செலவு குறைவதுடன், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

தமிழக வேளாண்மை , தோட்டகலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், உழவர்-உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான விலையுடன், இயற்கை விவசாயக் குழுவினரிடமிருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்து, தமிழ்நாடு ஆர்கானிக் புராடக்ட்ஸ் (டிஓபி) என்ற பெயரில்  குறைந்த விலையில் விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகள் ,  செயற்கை உரம்,  பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல், விளை பொருட்களின் கழிவுகளைப் பயன்படுத்தி, இடுபொருட்கள் செலவைக்  குறைத்து, மண் வளத்தைப் பெருக்கி, அதிக லாபமடையவும் அறிவுரை வழங்கப்படுகிறது" என்றார்.

இணையதள பதிவு?

இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்பும் விவசாயிகள் குறைந்தது  ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை வைத்திருக்க வேண்டும். 10 விவசாயிகள் அல்லது 50 ஏக்கர் நிலம் கொண்ட தொகுப்பு விவசாயிகள் ஒரு உள்ளூர் குழுவாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசின் சலுகைகள் வழங்கப்படும்.  www.pgsindia.gov.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரை தொடர்புகொள்ளலாம். இதில் பதிவு செய்வதற்கு, விளை நிலத்தின் சிட்டா, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல் தேவை.

thittathiljpg

திட்டத்தில் புதிய மாவட்டங்கள்

"தமிழகத்தில் மதுரை, வேலூர், கடலூர் உள்பட 10 மாவட்டங்களில், பிஜிஎஸ் திட்டத்தில் உள்ளூர் விவசாயக் குழுக்கள் தொடங்கப்பட்டன. 2018-19-ம் ஆண்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, நாகை, விருதுநகர் மாவட்டங்களில் குழுக்கள் தொடங்கப்பட்டு, மானிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மானியத் திட்டத்தில் புதிய மாவட்டங்களை  இணைக்க வாய்ப்புள்ளது.

இதுவரை திட்டம் அமல்படுத்தப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த அங்கக விவசாயிகளும் பிஜிஎஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அவர்களுக்கு இயற்கை விவசாய செயல்முறை பயிற்சி மற்றும்  இயற்கை விவசாய விளை பொருளுக்கான சான்றிதழ் கிடைக்கும். இதன் மூலம், அவற்றை விற்பனை செய்வது எளிதாக இருக்கும்" என்கின்றனர் வேளாண் துறை அதிகாரிகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in