Published : 28 Oct 2018 08:25 AM
Last Updated : 28 Oct 2018 08:25 AM
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப் படும் ‘மீ டூ’ இயக்கம் மூலம், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஸ்ருதி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக குற்றம்சாட்டினார். இதனிடையே கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஆகிய இரு தரப்பையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து அர்ஜுன் தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ருதியிடம் ரூ. 5 கோடி கேட்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். இதற்கு வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு, ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக ஸ்ருதி பதிலளித்தார். இந்நிலையில் அர்ஜுனின் மேலாளர் பிரஷாந்த் சம்பர்கி, சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி, அர்ஜுன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி, தவறாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி பெங்களூரு கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ''2015-ம் ஆண்டு நவம்பரில் 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அர்ஜுன் என்னிடம் காட்சிக்கு தேவையில்லாத அளவுக்கு நெருக்கமாக நடித்தார். பாலியல் ரீதியாக என்னை சீண்டினார். இதனால் கடும் மன உளைச்சலுக்காக ஆளானேன்.
நான் புதுமுக நடிகையாக இருந்ததால் அப்போது பாலியல் தொல்லைக் குறித்து வெளிப் படையாக கூறமுடியவில்லை. தற்போது ‘மீ டூ’ மூலமாக சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்தேன். என்னைப் போலவே 4 பெண்கள் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித் துள்ளனர். எனது புகாரின் காரண மாக அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் புகாரின் பேரில் போலீஸார் நடிகர் அர்ஜுன் மீது இந்திய தண்டனை சட்டம் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் விரைவில் அர்ஜுனி டம் விசாரிக்க முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT