Published : 17 Oct 2018 11:57 AM
Last Updated : 17 Oct 2018 11:57 AM
கர்நாடகாவில் வங்கியில் கடன் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி மேலாளரை அந்த பெண் சாலை யில் இழுத்துவந்து உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கி னார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளி யாகி, வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் தாவண கெரே மாவட்டத்தில் உள்ள நிஜலிங் கப்பா பாளையாவை சேர்ந்த 33 வயது பெண் அங்குள்ள டிஹெச்எஃப்எல் வங்கியில் ரூ. 15 லட்சம் கடன் கேட்டுள்ளார். இதற்கு வங்கி மேலாளர் முதலில் கடன் வழங்க மறுப்பு தெரிவித் துள்ளார். பின்னர் அந்த பெண்ணை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ''கடன் கொடுக்க வேண்டுமென்றால், தன்னுடன் பாலியல் ரீதியாக இணங்கி நடந்துகொள்ள வேண்டும்'' என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், வங்கி மேலாளரை நிஜலிங்கப்பா பாளையாவில் இருக்கும் தனது வீட்டுக்கு கடந்த திங்கள்கிழமை வர சொன்னார். அப்போது வீட்டுக்கு வந்த மேலாளரை வெளியே இழுத்து, அனைவரின் முன்னிலையிலும் உருட்டுக்கட்டையால் அடித்து உதைத்தார். இதனால் மனமுடைந்த வங்கி மேலாளர் நான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டிய போதும், அந்த பெண் சளைக்காமல் சரமாரியாகத் தாக்கினார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தாவண கெரே போலீஸார் வங்கி மேலா ளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் மேலாளர் ராகவேந்திரா மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் நேற்று ராகவேந்திராவை, தாவணகெரே மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
யூ-டியூப் தளத்தில் இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து #மீடூ விவகாரம் வெளியாகி வரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும், ''இது தான் ஒரிஜினல் மீ டூ''என கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT