Published : 09 Aug 2014 10:11 AM
Last Updated : 09 Aug 2014 10:11 AM

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை: ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது.

ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட்.

உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியான இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒரு பட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும்.

பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள் மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.

முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்அனுமதி இல்லாமல் படித்த படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x