Last Updated : 26 Jun, 2018 09:58 AM

 

Published : 26 Jun 2018 09:58 AM
Last Updated : 26 Jun 2018 09:58 AM

குப்பைகளுக்கு குட்பை: தூய்மை ஜமீன் ஊத்துக்குளி

தி

டக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, மற்ற உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முன்மாதிரியாக மாறியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் மொத்தப் பரப்பே 8 சதுர கிலோ மீட்டர்தான். சுமார் 17 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குஞ்சிப்பாளையம், நஞ்சேகவுண்டன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி, காந்திநகர், சீனிவாசபுரம், வசியாபுரம், காளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கிய இந்த பேரூராட்சியில் 50 தெருக்களில் 5154 வீடுகள் மற்றும் வர்த்தக ரீதியான கட்டிடங்கள் ஆகியவற்றில் இருந்து ஒரு நாளைக்கு சேகரமாகும் குப்பையின் அளவு 5 டன்.

இவற்றை தினமும் சேகரித்து, தரம்பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் 15 பேரூராட்சி ஊழியர்கள், 40 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

ஞாயிறு மற்றும் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் வீடுகளில் இருந்து தள்ளுவண்டி மூலம் தினமும் 3.85 டன் மக்கும் குப்பை, 1.95 டன் மக்கா குப்பை, 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகின்றன.

மக்கும் குப்பையை ‘வின்ட்ரோ பேடு’ முறையில் குவிக்கப்பட்டு, அவற்றின் மீது மாட்டுச் சாண கரைசல், நுண்ணுயிரி திரவம் தெளிக்கப்பட்டு ஊற வைக்கப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை குப்பை திருப்பி போடப்படுகிறது. 60 நாட்கள் கழித்து மக்கிய குப்பை சலிக்கப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இப்படி தினமும் 300 கிலோ இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 200 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கிலோ ரூ.3-க்கும் விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.3,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உரம் விற்பனை, காய்கறிகள், மறுசுழற்சி பொருட்கள் மூலம் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்த வருவாய். இதில் மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக் விற்பனை மூலம் கிடைக்கும் மாத வருவாய் ரூ.5 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்களுக்கே பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்பட்ட உரத்தினை கொண்டு 2 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்ட மூலிகை தோட்டத்தில் கற்றாழை, சர்க்கரை கொல்லி, திப்பிலி, பிரண்டை, திருநீர் பத்ரி, நித்யகல்யாணி, நிலவேம்பு, ஆடாதொடை, நொச்சி, கீழாநெல்லி, கற்பூரவல்லி, துளசி, தூதுவேளை, அருவதா உள்ளிட்ட 22 வகையான மூலிகைகள் வளர்கின்றன.

அத்துடன் இயற்கை விவசாய முறையில் கத்திரி, மிளகாய், பூசணி மற்றும் பல்வேறு கீரை வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இவைகளை பொதுமக்கள் இலவசமாக பறித்துச் செல்கின்றனர். மக்களின் ஏகோபித்த ஆதரவால் மூலிகைத் தோட்டம் மேலும் 3 சென்ட் அளவுக்கு விரிவாக்கப்படவுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பேரூராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் தூய்மை பாரதம் திட்டத்தில் மினி டிப்பர் லாரி யை வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளது.

‘குப்பையில்லா தெருக்கள்’ என்ற இலக்கை நோக்கிய பயணம் வெறும் தூய்மையை மட்டுமல்ல, இயற்கை விவசாயத்துக்கும் மூலிகை வளர்ப்புக்கும் வருவாய்க்கும் வழி செய்திருக்கிறது. துப்புரவு தொழிலாளர்க ளின் அர்ப்பணிப்பு உணர்வே முக்கிய காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x