Last Updated : 15 Feb, 2018 09:11 AM

 

Published : 15 Feb 2018 09:11 AM
Last Updated : 15 Feb 2018 09:11 AM

இலவச மின்சாரத்தில் தண்ணீர் திருடி விற்பனை: போராடி பெற்ற நீர் காடு வந்து சேராததால் வாடும் விவசாயிகள்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் உள்ள மொத்த பாசனப் பகுதிகளை 4 மண்டலங்களாகப் பிரித்து ஆண்டுக்கு 2 மண்டலங்கள் பாசனம் வழங்கப்படும் என தமிழக அரசு ஆணையிட்டது. பாலாறு படுகையில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முறையே முதல் மண்டலத்தில் 94 ஆயிரத்து 522 ஏக்கரும், இரண்டாம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 202 ஏக்கரும், 3-ம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 362 ஏக்கரும், 4-ம் மண்டலத்தில் 94 ஆயிரத்து 362 ஏக்கரும் பாசனம் பெறும்படி பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் சில விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இரவு 8 மணிக்கு மேல் அதிகாலை வரை தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. கால்வாய் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் இருந்து குழாய்களை வாய்க்கால் நீரில் போட்டு, மோட்டார் மூலம் கிணற்றில் தண்ணீரை நிரப்புகின்றனர். இவ்வாறு அதிகாலை வரை தண்ணீர் திருட்டு தொடர்கிறது. மறுநாள், லாரிகள் மூலம் தண்ணீர் மட்டை மில்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லாரி தண்ணீர் ரூ.1000

பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆவலம்பம்பட்டி, கொண்டேகவுண்டன் பாளையம், கரப்பாடி பகுதிகளில் பரம்பிக்குளம் பிரதான கால்வாயின் இருபுறமும் அமைந்துள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து, கிணற்றுக்கு 10 லாரி தண்ணீர் வீதம் தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லாரி தண்ணீர் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுவதால், வாய்காலில் திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வணிக பயன்பாட்டுக்கு விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை தடுக்க பொதுபணித்துறை, வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். விவசாயத்துக்கு தரப்படும் தண்ணீரை தொழிற்சாலைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடைமடை விவசாயம் பாதிப்பு

இப் பகுதியை சேர்ந்த திரைப்பட இயக்குநர் ந.பரதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கருகும் பயிர்களை காக்க, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிஏபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிபெற்ற தண்ணீரை, ஒரு சில விவசாயிகள், இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வாய்காலில் குழாய் அமைத்து தண்ணீர் திருடி, தென்னைநார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கடைமடை விவசாயிகள் தான்.

இந்த தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு தலைவர் பரமசிவம், ‘தி இந்து’விடம் கூறியதாவது: திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த ஜனவரி 31-ல் பரம்பிக்குளம் பிரதான கால்வாயில், முதல் மண்டல பாசனத்துக்கு முதல் சுற்றுத் தண்ணீர் திறக்கப்பட்டது. பரம்பிக்குளம் பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம், வாய்க்காலில் தண்ணீர் திருட்டும் நடைபெறுகிறது. விவசாய கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய சார் ஆட்சியர் தடை விதிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x