Last Updated : 03 Feb, 2018 11:10 AM

 

Published : 03 Feb 2018 11:10 AM
Last Updated : 03 Feb 2018 11:10 AM

ரத்தத்தின் ரத்தமான ராமச்சந்திரன்

ண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை இரண்டிலும் உள்ள ரத்த வங்கிகளுக்குச் சென்று, ‘ராமச்சந்திரன்’ என்று சொன்னால் போதும் அந்தப் பெயருக்கு அப்படி ஒரு மரியாதை தருகிறார்கள்.

யார் இந்த ராமச்சந்திரன்?

சிதம்பரம் தெற்கு சன்னதியில் இருக்கும் ராமச்சந்திரனை தெரியாதவர்கள் இல்லை. உணவகம் ஒன்றில் சர்வராக இருக்கிறார். அவரை சந்தித்தோம்.

“எங்க குடும்பத்தில் மொத்தம் 16 பேர். அதுல நான் எட்டாவது பிள்ளை. சின்னச்சின்ன வேலைகள் செய்துட்டு இருந்தேன். 1985-வது வருஷம், நெய்வேலி என்எல்சி அதிகாரி ஒருத்தருக்கு 10 வருஷத்துக்கு அப்புறமா இரட்டை குழந்தை பிறந்திச்சி. அதுல தாய்க்கும், ஒரு குழந்தைக்கும் மஞ்சள் காமலை. அவங்கள காப்பாத்த 6 மணி நேரத்தில் ‘ஏ ஒன் நெகடிவ்’ வகை ரத்தம் வேண்டும் பல இடங்களில் முயற்சி பண்ணியும் கிடைக்கல. அந்த தாயும், ஒரு குழந்தையும் இறந்து போனாங்க.

அப்போதான் ரத்த தானத்தின் முக்கியத்துவத்த உணர்ந்தேன். அப்போ தொடங்கியதுதான், தொடர்ந்து ரத்த தானம் செய்துட்டு வர்றேன். இதுவரைக்கும் 129 முறை ரத்தம் கொடுத்தாச்சு’’ என்று கூறும் ராமச்சசந்திரன் கடந்த 34 வருடங்களாக ‘இலவச ரத்ததான சேவை மையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் எளிய மனிதர்களுக்கு இலவசமாக ரத்த தானம் செய்து வருகிறார்.

மேலும் அவர் சொன்னார். “பல நண்பர்களை ஒன்றாக இணைத்து இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். இதுவரை எங்க அமைப்பின் மூலம் 16 ஆயிரம் யூனிட் ரத்தம் தானம் செய்துள்ளோம். எனது மனைவி சித்ராவுக்கு 45 வயசாகுது. அவங்க 18 முறை ரத்ததானம் செய்திருக்காங்க” என்றார் பெருமிதத்துடன். தொடர்ந்து 9 வருடங்களாக அதிக ரத்ததானம் வழங்கியதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியரும், கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கையாலும் விருதும் கிடைத்திக்கிறது.

கண் தானத்திலும் ஆர்வம் காட்டிட்டு வருகிறார். இதுவரை 3,600 ஜோடி கண்களை தானமாகப் பெற்று வழங்கியிருக்கிறார். இதுபோக 230 பேரின் உடல் தானமும் கொடுக்கச் செய்திருக்கிறார். உறுப்பு தானம் முலம் இருவருக்கு கிட்னியும் கிடைத்திருக்கிறது. தானம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவரை வாழ்த்திவிட்டு திரும்பினோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x