Published : 02 Apr 2014 03:20 PM
Last Updated : 02 Apr 2014 03:20 PM

சீரியஸ் பாதி... சிரிப்பு மீதி..!

“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதது மாதிரி” என்றொரு பழமொழி உண்டு. இப்போதைய மக்களவை பொதுத் தேர்தலும் அப்படித்தான் இருக்கிறது. நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தமிழராக இருந்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்தத் தேர்தலால் ஆதாயம் ஏதும் இல்லாமல் செய்துவிட்டாரே என்று அழுகாச்சியாக இருக்கிறது. டெல்லிக்குப் போகும் எந்தத் தமிழர் தான் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருக்கிறார் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

ஏதோ தேர்தல் காலத்தில்தான் வாக்காளர்களுக்குக் கொஞ்சமாவது ‘கவனிப்பு’ இருக்கும். ‘எடுக்கிற’ கை கள் கொடுக்கிற ஒரே அதிசய காலம் இதுதானே! அப்படி கொடுப்பதில் மண்ணைப் போடலாமா?

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் கூடாது, கூம்பு ஸ்பீக்கர் கூடாது, சுவரில் எழுதக்கூடாது, போஸ்டர் அடிக்கக்கூடாது, அதிக வாகனங்கள் பின்தொடரக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ராத்திரி வேளையில் வாக்காளர்களை ரகசியமாக பின்தொடரக் கூடாது என்பது தான் சரியில்லை. நேரடியாகப் பணம் தர முடியாமல் சுற்றிவளைத்து வாக்காளர் களுக்கு ஜாடை காட்ட வேண்டி யிருக்கிறது.

‘உங்கள் வாக்குகள் விலை மதிப்பற்றது, அதை விற்றுவிடாதீர் கள்’ என்ற வாசகம் ‘முரண்தொகை’ யாக இருக்கிறதே! விலைமதிக்கவே முடியாத ஒன்றை ‘விலை’யே இல்லாமல் கொடுக்கச் சொல்வது என்ன நியாயம்? சரி போகட்டும், தொகுதிக்கே வராத, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும் வழக்குகளுக் கும் ஆளான, கிரிமினல் என்று அப்பட்டமாகத் தெரிந்த வேட்பாளர்கள் போட்டியிட முடியாமல் தடுக்க முடிந்ததா? அதில் அல்லவா ஏதாவது வழிமுறையைக் கண்டுபிடித்து ஊழல் வேட்பாளர்களுக்கும் ஊழல் கட்சிகளுக்கும் சிக்கலை ஏற்படுத்தி யிருக்க வேண்டும்?

இதுவரை இருந்திராத வகையில் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 5 முனைப் போட்டி நடக்கிறது. அதி முக, திமுக, காங்கிரஸ், பாஜக அணி, கம்யூனிஸ்டுகள் என்று போட்டி போடுகிறார்கள். இதில் கம்யூனிஸ்டு களை விடுங்கள், கிட்டே போனால் நம்மிடமே நன்கொடை கேட்பார்கள். மற்றவர்கள் நிலைமை அப்படியா?

தமிழக வாக்காளர்கள் இருக் கிறார்களே... அநியாயத்துக்கும் விவரமானவர்கள்! 1967 முதலே அவர்கள் ஏதாவது இலவசம் என்று அறிவித்தால்தான் வாக்களிப் பார்கள். ‘ரூபாய்க்கு 3 படி லட்சியம், ஒரு படி நிச்சயம்’ என்று அண்ணாதுரை அறிவித்தார். தமிழர்களின் தேவையறிந்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்தார். ‘அண்ணா வழியில் அயராது உழைப் பவர்’களும் அதை விடுவதாக இல்லை.

அதுவும் போக, தமிழர்கள் என்றைக்குமே ஊழலை வெறுத்த தில்லை. ‘2 ஜி ஊழல் ஒன்றுமே இல்லை’ என்று இறுமாப்பால் அல்ல தமிழர்களின் அரசியல் பண்பாட்டைப் புரிந்துகொண்டதால்தான் மேடை யில் தைரியமாகப் பேசி வரு கின்றனர்.

குடும்ப ஆட்சி என்பதும் இங்கே கெட்ட வார்த்தை கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ‘சென்னை’ குடும்பம், அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘மன்னை’ குடும்பம். இவர்களோடு மாறி மாறி டெல்லியில் இருந்து கூட்டணி போட ‘அன்னை’ குடும்பம்! இவர்கள் மீது தமிழக வாக்காளர்கள் காட்டும் குடும்பப் பாசத்தைப் பார்த்துவிட்டுத்தான் டாக்டர் ஐயாவும் கேப்டனும் குடும்பத்தோடு குதித்திருக்கிறார்கள்.

தேர்தல் கமிஷன் கண்ணில் மண்ணைத் தூவி, வாக்காளர்களுக்கு அன்பளிப்பு தர பாடாய் படும் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை... சினிமா கவர்ச்சிக்கு இணையாக தமிழனுக்கு ‘சீர் வரிசை’ கவர்ச்சியும் உண்டு. பித்னா ஸ்டோர், சிறுவணா ஸ்டோர் என்று பாத்திரக் கடை அதிபர்கள் மட்டும் கட்சி ஆரம்பித்தால் போதும்.... அடுக்கு சட்டி, தேக்சா, போணி, எவர்சில்வர் குடம், பிளாஸ்டிக் பக்கெட்டி, தேங்காய் துருவி, மூக்கு சொம்பு உள்ளிட்ட 54 சாமான்கள் இலவசம் என்று அறிவித்து, மொத்த தொகுதியிலும் வோட்டு அள்ளி விடுவார்கள் ஜாக்கிரதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x