Published : 02 Feb 2016 11:14 AM
Last Updated : 02 Feb 2016 11:14 AM

நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ளாது

‘காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?’ என்ற கட்டுரை, காந்தி மற்றும் அம்பேத்கர் குறித்து விவாதித்திருந்தது. பாராட்டுகள்! ஒடுக்கப்பட்ட பிரிவினரில் ஒருவராகப் பிறக்க நேர்ந்து, ஒடுக்குதலை அனுபவித்த அம்பேத்கரின் பார்வை நிச்சயம் காந்தியின் பார்வையிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும். சாதிய ஒடுக்குதல்களுக்கு எதிராகப் போரிட வேண்டிய தேவை இன்னும் வலுவாகவே உள்ளது என்பதை இந்த இரு ஆளுமைகளையும் தனித்தனியாகவோ கூட்டாகவோ பின்பற்றும் இளம் தலைமுறையினர் அனைவருமே உணர வேண்டும்.

ஆதிக்கச் சாதிகளின் தாக்குதல்கள் கடுமையாக இருக்கும் இன்றைய சூழலில், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையின் பெரும் பங்கு அவர்களின் எதிர்வினைகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் நிகழ வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வை பொருத்தமுடையதாகவே படுகிறது. அதே நேரத்தில், பிறந்த சாதியின் அடிப்படையில் ஒருவரை இழிவுபடுத்துவதும் அவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை கொள்வதும் ஒரு நாகரிக சமூகத்துக்கு ஒவ்வாத - நாணித் தலை குனிய வேண்டிய செயல்கள் என்ற வலுவான பிரச்சாரத்தை நாடு முழுதும் எடுத்துச் செல்வதும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்குத் துணை நிற்பதும், சாதிக்கும் சாதிய ஒடுக்குதல்களுக்கும் எதிரான அனைத்துத் தரப்பினரின் கடமையாகும்.

ஒரு சிலர், சாதி மறுப்பு மணம் செய்துகொண்டு எடுத்துக்காட்டாக வாழ்வதும் சமூக சேவை என்ற அடிப்படையில் ஆங்காங்கே சில அமைப்புகள் செயல்படுவதும் பாராட்டத்தக்கவையாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை மிகப் பெரும் சவாலானது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவே, தொடர்ந்து இதுகுறித்த உரையாடல்களும் விவாதங்களும் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்த முயற்சியும் செய்யாது கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் நாடு என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதை சர்வதேச நாகரிகச் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறானதும் நாட்டுக்கு இழிவைத் தேடித் தருவதுமான சாதியையும் சாதிரீதியான ஒடுக்குதல்களையும் களைவது எப்படி என்பதே நம் அனைவரது மனச்சாட்சியையும் குடைந்துகொண்டிருக்க வேண்டிய பிரச்சினையாகும்!

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x