Published : 14 Dec 2015 10:38 AM
Last Updated : 14 Dec 2015 10:38 AM

தொடங்கட்டும் மாற்றம்!

நான் ஒரு மகப்பேறு மருத்துவர். ‘தி இந்து’வில் என் சிந்தனையை ஒத்த கருத்துகள் பல கண்டுள்ளேன். புதன்கிழமை அன்று வெளியான ‘கொல்வது பயம்’எனும் கட்டுரை மிகுந்த தாக்கம் தந்தது. படித்தவர்களில் பலர் தம் ஊரில், தெருவில் நடைமுறைப்படுத்தப்பட்ட/படுத்தப்படாத திட்டங்களைப் பற்றிப் பெரிதாக அக்கறை கொள்வதில்லை.

தம் வீட்டில் மட்டும் வசதிகளைப் பெருக்க நேரத்தைச் செலவிடுகின்றனர். நாம் ஏற்படுத்திய அல்லது கேள்வி கேட்காமல் வளரவிட்ட நடைமுறைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதைப் பலர் சிந்திக்க மறுக்கின்றனர். கோழைத்தனம் சாமர்த்தியம் என்றாகிவிட்டது. நேர்மையாக வருமான வரிசெலுத்துபவர்களும், தங்கள் பகுதி கவுன்சிலர்களிடம் கூட பேசுவதில்லை.

அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து ஒரு கோரிக்கையையோ ஒரு புகாரையோ நிர்வாகத்தினரிடம் கொண்டு செல்ல விரும்புவதில்லை. அதற்குப் பல காரணங்களைக் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அதிகாரிகளில் சிலர் மக்களுக்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதும் நடக்கிறது.

கல்வியின் பெயரால் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு அளவே இல்லை. மாணவ, மாணவியர் பல்வேறு உடல்நிலை பாதிப்புகளால் சிகிச்சைக்கு வருவது பெருகுகிறது.

ரத்தசோகை, மாதவிடாய்ப் பிரச்சினைகள், அதிக உடல் பருமன் ஆகியவை அபாய அளவைத் தாண்டி அதிகரிக்கின்றன. இளம் வயதில் திருமணம், குழந்தைப்பேறின்மை, ஜோதிடம் என்பன போன்ற காரணங்களுக்காகப் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவது அதிகரித்திருக்கிறது.

என்னளவில் மட்டும் சிகிச்சைக்கு வருபவரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். கல்வி குறித்து ‘தி இந்து’வில் வந்த கட்டுரைகளைச் சேர்த்து என் குழந்தையின் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்துள்ளேன். மாற்றம் தன்னளவில் தொடங்க வேண்டியதுதான். ஆனால், அறிவுள்ளவர் கோழைத்தனம் விடுத்து ஒன்று கூட வேண்டியது அவசியம்.

- வித்யா சங்கரி, மகப்பேறு மருத்துவர். மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x