Published : 27 Nov 2015 11:11 AM
Last Updated : 27 Nov 2015 11:11 AM

அறியப்படாத பாரதி

பாரதியாரின் இதழியல் சாதனைகள் இன்னும் ஆழமாக ஆராயப்படவில்லை என்னும் கசப்பான உண்மையை அழுத்தமாகச்சொன்னது மாலன் எழுதிய ‘தராசு - தனித்துவமான ஓர் ஆவணம்’ கட்டுரை. இதற்குமுன் பாரதி ஆய்வாளர் ரா. அ. பத்மநாபன், ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகியோர் எழுதிய கட்டுரைகளில் தராசு குறித்த ஆழமான பதிவுகள் எழுதியுள்ளனர். பாரதியின் படைப்புகளை ‘பாரதி தமிழ்’ என்ற தலைப்பில் அழகாகத் தொகுத்துத் தந்த பெ. தூரனின் தொகுப்பில் ‘தராசு’வின் முதல் வெளியீடு குறித்த செய்தி விடுபட்டுப்போனதை ஆ.இரா. வேங்கடாசலபதி சுட்டிக்காட்டியுள்ளார். தமிழில் குறிப்பிடத் தகுந்த இரு கவிஞர்களின் சந்திப்பு அதிகமான கவனம் பெறவில்லை என்பது குறையே.

இந்திய சுதந்திரப் போர் உச்சத்தில் இருந்தபோது அவர் எழுதிய பத்தி எழுத்துகள் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்த்ததை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அவர் எழுதிய இதழ்களில் அவர் எழுதிய புனைபெயர்கள் குறித்து புதிய கோணத்தில் இன்னும் ஆராய்ந்தால் புதிய செய்திகள் கிடைக்கலாம்.தன் அரசியல் நிலைப்பாட்டினை நேரடியாக எடுத்துக்கூற இயலாத இடங்களில், அவர் குறியீடுகள் மூலமாக,புராணத் தொன்மங்கள் மூலமாகச் சொல்லவந்ததை அழுத்தமாகச் சொல்லிச் சென்றார்.

பாரதிதாசனைப் பற்றி ‘தராசு’ இதழில் பாரதி எழுதிய கட்டுரை அவரது நேர்மைக்கும் கறாரான எழுத்துக்கும் சான்று பகர்வதாய் உள்ளது. பத்திரிகைகள் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பாரதி எழுதிய பத்திகள் குறித்து விரிவாக ஆய்வுகள் நிகழ்த்த வேண்டியதும் இதுவரை விடை தெரியாத பாரதி குறித்த புதிர்களுக்கு விடை காண்பதும் காலத்தின் கட்டாயம்.

- முனைவர் சௌந்தர மகாதேவன்,
தமிழ்த் துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x