Published : 13 Nov 2015 10:00 AM
Last Updated : 13 Nov 2015 10:00 AM

கதாநாயகன் நிதிஷ்குமார்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் நாயகன் லாலு என்பதை அடிக்கோடிட்டு கூறினாலும் அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் உண்மையான கதாநாயகன் நிதிஷ்குமார்தான். அவருடைய ஆட்சியில் பிஹார் கண்ட வளர்ச்சியே இந்த வெற்றியைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

ஆச்சரியம் முதல் நாள் கருத்துப் பேழையில் வாசித்த `ஒரு பிடி மண்’ கட்டுரையும், மறுநாள் வெளிவந்த பிஹார் தேர்தல் முடிவுகளும் ஒன்று சேர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தின. 168 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டிறைச்சி அரசியலுக்கான விதையை விதைத்த பிரிட்டிஷ் அதிகாரி கெய்த்தின் சூழ்ச்சியையும், பிஹார் தேர்தலில் சங்கப்பரிவாரங்களின் நடவடிக்கையும் ஒரே சாயலைக் கொண்டிருக்கின்றன. மன்னரின் புதல்வர்களுடைய தலைகளைக் கொய்து உணவுத் தட்டில் ஏந்திவந்த மேஜர் ஹட்ஸனின் செயலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

ஜத்துஜஸ்ரா, மின்னஞ்சல் வழியாக

பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து நடுப்பக்கத்தில் விரிவாக அலசப்பட்டிருந்தது. நிதிஷ்குமார் வெற்றியின் நாயகன் தான். ஆர்ப்பாட்டமில்லாமல், ஆரவாரமான வாய்ச்சவடால் இல்லாமல், வெற்றியைச் சாதித்துக் காட்டியுள்ளார். சகிப்புத்தன்மை சாதிக்கும் என்று நிரூபித்துள்ளார்.

பொது எதிரியைச் சரியாக அடையாளம் கண்டு, நீண்டகால எதிரிகளாக இருந்தவர்களை நண்பர்களாக்கி, வறட்டு கவுரவம் பார்க்காமல், விட்டுக்கொடுத்து கூட்டணி அமைத்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெற்றுள்ளதாலேயே தொடர்ந்து மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எதிர் கொண்டுள்ள சவால்களை முறியடித்து சாதனை புரிய வேண்டும்.

மு செல்வராஜ், மதுரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x