Published : 06 Oct 2015 10:21 AM
Last Updated : 06 Oct 2015 10:21 AM

அன்பு மிச்சம் இருக்கிறது

‘எதிரில் இருப்பவர்கள் எதிரிகளா?’ கட்டுரை அசாத்தியமான விவாதப் பொருளை உரிய காலத்தில் முன்வைக்கிறது. காந்தி என்ற எளிய மனிதரின் பன்முகப் பரிமாணங்கள், அவரை மிகுந்த விமர்சனத்துக்கு ஆட்படுத்துவோரும் வியந்து நோக்குவது. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று மகாகவியால் எப்படிச் சொல்ல முடிந்தது? மாற்றுக் கருத்து உள்ளவர்களை வெறுக்காமலே அவர்களுடனான முரண்பாடுகளை வெளிப்படையாக எடுத்துவைக்கும் உளப்பாங்கு இன்று மிகவும் தேவைப்படுகிறது.

பேரா. எம்.எம். கல்புர்கி படுகொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், தனக்கும் இலக்கு குறித்து வைத்த பஜ்ரங் தொண்டர் புவித் ஷெட்டியைப் பேராசிரியர் கே.எஸ். பகவான் அணுகிய விதம் நெஞ்சுரம் மிக்கது. “நேரில் வா பேசுவோம், நான் தேர்ச்சி பெற்றிருக்கும் விஷயங்களை உன்னால் தகர்த்துவிட முடியுமானால், அதைச் செய். உனது பெற்றோரோ, ஆசிரியரோ உன்னை நேர்த்தியாக வளர்க்கவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு கொலை மிரட்டலுக்குப் பணிந்து என்னை மாற்றிக்கொள்வேன் என்று நினைக்காதே...” என்றார் அவர்.

மாட்டிறைச்சி பிரச்சினையைப் பேசும் இந்துத்துவ சக்திகள் ஒருவரும், ஒரு பேச்சுக்காகக் கூட, அப்பாவி மனிதர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வருந்தத் தயாரில்லை என்பது சம காலத்தின் சவால்களை விளக்குகிறது. சகிப்புத் தன்மையற்றவர்கள் வேண்டுமென்றே கலவரங்களைத் தூண்டிவிடும் இத்தகைய பின்புலத்தில், சமஸ் எழுதிய இக்கட்டுரையின் நிறைவில் ‘அன்பு எவ்வளவோ மிச்சம் இருக்கிறது...’ என்ற சொற்கள் ஆழ்ந்த பொருளடர்த்தி கொண்டிருக்கின்றன. உள்ளங்களோடு உரையாடல் நிகழ்த்தக் கோருகின்றன. நம்பிக்கை விளக்கை ஏற்றி வைக்கின்றன.

- எஸ்.வி. வேணுகோபாலன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x