Published : 24 Oct 2015 10:40 AM
Last Updated : 24 Oct 2015 10:40 AM

மாற்றம் தலையிலிருந்து வர வேண்டும்

உணவகங்களில் காவலர்கள் காசு கொடுக்காமல் இலவசமாகச் சாப்பிடுவது பற்றிய அரவிந்தனின் கட்டுரை, இந்தப் பிரச்சினையின் மற்ற பரிமாணங்களைப் பற்றி கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளது.

ஒரு கான்ஸ்டபிளையும் டி.ஜி.பி.யையும் பொத்தாம் பொதுவாக நாம் `காவலர்கள்’ என்று சொல்லிவிட முடியாது. எந்த அரசுத் துறையிலுமே கடைநிலையில் பணிபுரிவோருக்கும் உயர்நிலை அதிகாரிக்குமான வேறுபாடு, வரலாற்றின் மத்திய காலகட்டத்தில் ஒரு சுல்தானுக்கும், அவரது அரண்மனையை இரவுபகலாகக் காவல் காக்கும் வாயில்காப்போனுக்குமான வித்தியாசமாகவே இருந்துவருகிறது.

அடிப்படையான பிரச்சினை என்ன? கடைநிலை ஊழியர் ஏன் லஞ்சம் வாங்குகிறார்? ஒரு பெட்ரோல் பங்க் ஊழியரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய மாத ஊதியம் ரூ. 5,000. ஒரு குடும்பத்தை நடத்த இந்தத் தொகை போதுமா? எனவே, நம் வண்டிக்குக் காற்றழுத்தப் பரிசோதனை செய்யும் அந்த ஊழியருக்குக் கொடுக்கும் அஞ்சு, பத்து ரூபாய் என்பது லஞ்சம் அல்ல; அவருடைய ஊதியம்.

“இலவச உணவைத் தங்கள் உரிமையாகக் கருதுபவர்கள் உள்ள ஒரே துறை காவல் துறைதான்” என்று எழுதுகிறார் அரவிந்தன். உண்மையில் மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளிலேயே ஆக மோசமாக மனித உரிமைகள் பறிக்கப்படுவதும், அடிமைத்தனமும் நிலவுவது காவல் துறையில்தான். காவலர்களின் தொப்பை பற்றி நாம் எத்தனையோ கேலிகளைப் பார்க்கிறோம், படிக்கிறோம். காவலர்கள் அத்தனை பேருக்கும் ஏன் அப்படித் தொப்பை வருகிறது என்றால் அவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை நேரமே கிடையாது. காலையில் ஐந்து மணிக்கும் வேலைக்குப் போக வேண்டும். நள்ளிரவிலும் பாரா பார்க்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாரியின் வீட்டுக்கு மட்டன் வாங்கிக்கொண்டுபோய் கொடுக்க வேண்டும்.

கான்ஸ்டபிள்களின் வாழ்க்கைக்கும் அந்த உணவு வண்டி வைத்திருப்பவரின் வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

மாற்றம் தலையிலிருந்து வர வேண்டும்; கால்களிலிருந்து அல்ல!

- சாரு நிவேதிதா, எழுத்தாளர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x