Published : 12 Oct 2015 10:33 AM
Last Updated : 12 Oct 2015 10:33 AM

ஆட்டிவைக்கும் பிஹார்

‘உண்மையான பிரச்சினைகள் எப்போது அரசியலாகும்?’ தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல, பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலைக் கண்டு பாஜக உண்மையிலேயே அச்சம் கொண்டுள்ளது நிதர்சனம்.

மாநிலத் தேர்தல்களுக்கு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்ததைத்தான் நாம் இதுவரை கண்டுள்ளோம். ஆனால், இப்போது பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் முகாமிட்டுப் பிரச்சாரம் செய்வது, பாஜக கூட்டணி உண்மையிலேயே வலுவாக உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு முழுக் காரணம் நிதிஷ்குமார் வழங்கிய ஒரு நல்ல நிர்வாகம்.

முன்பு பின்தங்கிய மாநிலம் என்று கேலி செய்யப்பட்ட பிஹார், இன்று நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது மகிழ்ச்சிக்குரியது. வளர்ச்சி, நல்ல நிர்வாகம் போன்றவை தங்களுக்கே உரித்தானவை என முழங்கிவந்த பாஜக, பிஹாரில் தன் முழக்கம் கைகொடுக்குமா என்ற அச்சத்தில் உள்ளது.

இருப்பினும், மக்கள் பிரச்சினைகளைத் தாண்டி சாதி/மத ஒட்டுக் கணக்குகளே ஜெயிக்கப்போகின்றன என்ற கணிப்பு நம்மைச் சுடுவது மட்டுமன்றி, அதிர்ச்சியையும் அளிக்கிறது.

- ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.

***

‘உண்மையான பிரச்சினைகள் எப்போது அரசியலாகும்?’ என்ற தலையங்கம் பெரும்பாலான இந்தியக் குடிமக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது.

சாதியும், மதமும், புஜபலமும், பணபலமும்தான் நம் தேசத்தில் நடக்கும் தேர்தல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

கல்வி, குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு, மின்சாரம், வீட்டு வசதி, சாலை வசதி போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, தான் அல்லது தான் சார்ந்த கட்சி என்ன செய்யப்போகிறது, அதற்கான செயல்திட்டம் எப்படி இருக்கப்போகிறது என்று எதுவும் சொல்லாமல், மேற்சொன்ன குறுக்கு வழிகளிலேயே ஆட்சிக்கு வரப் பெரும்பாலான அரசியல்வாதிகளும் கட்சிகளும் நினைக்கின்றனர்.

‘பிஹார் தேர்தலில், உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தாண்டி, சாதி/மத ஓட்டுக் கணக்குகளே ஜெயிக்கப்போகின்றன என்பதைத் தான் எல்லாக் கணிப்புகளும் சொல்கின்றன. இந்த நிதர்சனம்தான் சுடுகிறது என்ற உங்கள் கவலை நியாயமானது.

‘நல்ல ஆட்சி அமைய வேண்டுமே’ எனக் கவலைப்படு வதைத் தவிர, சாதாரணக் குடிமகன் வேறு என்ன செய்ய முடியும்? ஆண்டாண்டுகாலமாக அந்த நம்பிக்கையில்தானே அவன் ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கிறான்? அந்த நம்பிக்கை நிறைவேறுவது அரசியல்வாதிகளின் மனமாற்றத்தில்தான் இருக்கிறது.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x