Published : 05 Sep 2015 10:24 AM
Last Updated : 05 Sep 2015 10:24 AM

ஒரு சிப்பியும் கடல் பயணமும்

“சமூகத்தைத் சீர்திருத்த விரும்பினால், நீங்கள் கட்டாயம் கல்வியைச் சீர்திருத்துங்கள்” என்றார் போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளரான ஜெனஸ் கோர்ச்சாக்.

1979-ல் குழந்தைகள் ஆண்டாகவும் ஜெனஸ் கோர்ச்சாக் ஆண்டாகவும் ஐ.நா. சபை அறிவித்தது. புத்தகம் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது என்பது அவரின் கருத்து. ஆசிரியர்களே மாணவர்களைவிட உயரமான மேசையை முதலில் அகற்றி, அவர்களின் இருக்கை அருகேயே அதே அளவிலான இருக்கையிலேயே அமருங்கள். அவர்களை அவர்களில் ஒருவராக உற்றுநோக்குங்கள்.

அவர்களின் சட்டைப் பை, கைப்பையை ஆசையோடு திறந்து பாருங்கள், அதில் ஆணிகள், மணிகள், இலைகள், வண்ணக் கண்ணாடிச் சில்லுகள், பாசி, சிப்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், மலர்கள் என ஏராளமான பொருட்கள் இருக்கும். இனம்புரியாத ஆர்வத்தில் அவற்றைச் சேகரித்துச் சொந்தம் கொண்டாடுவது அந்த வயதுக்கே உரிய சந்தோஷத் தருணங்கள்.

ஜன்னல் வழி பார்ப்பதற்கு முடியாத அளவு உயரமாக அமைத்து, பள்ளிக்கூடத்தைச் சிறைச்சாலைகளாக்குகிறோம். மேசையை விட்டு இறங்கி வாருங்கள் ஆசிரியர்களே! குழந்தைகள் வருங்கால மனிதர்கள் அல்ல, அவர்கள் இன்றைய மனிதர்கள் என்பதை உணர்வோம். உலகின் கொடூரங்களில் மிகவும் மோசமானது ஒரு குழந்தை தன் அப்பா, அம்மா அல்லது ஆசிரியருக்குப் பயப்படுவதாகும். நம்புவதற்கும் நேசிப்பதற்கும் பதிலாக அவர்களைக் கண்டு பயப்படுகிறது குழந்தை.

அவர்களின் பையிலுள்ள ஒரு சிப்பியை எடுத்து அவர்களுக்குக் கடற்பயணக் கனவை ஏற்படுத்துவோம். ஒரு திருகாணியும் சில கம்பிகளும் விமானத்துக்கான கனவாய் இருக்கலாம். குழந்தைகளின் பெரும் விருப்பம் மரியாதை, நம்பிக்கை அன்பு மட்டுமே.

ஜீவன். பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x