Published : 30 Sep 2015 10:40 AM
Last Updated : 30 Sep 2015 10:40 AM

மவுனம் கலையட்டும்

ஒரு மதத்திலிருந்து அரசியல் சித்தாந்தத்தைக் கட்டமைக்கும்போது, அம்மதத்தின் சாரம் மாற்றியமைக்கப்படுவது குறித்துத் தனது நேர்காணலில் மிகத்தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளார் ரொமீலா தாப்பர்.

இப்படி, எந்த மதத்திலிருந்து ஒரு சித்தாந்தம் கட்டமைக்கப்பட்டாலும், அம்மதத்தின் தலைவர்களது தலையீடு மிகவும் இன்றியமையாததாகும்.

ஒரு சிறு குழுவினரின் உணவுப் பழக்கத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் அம்மதத்தின் பெரும்பான்மையினரின் மீது திணிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

அவர்கள் தங்கள் மவுனத்தைக் கலைத்துவிட்டு, தாங்கள் எந்தப் பக்கம் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எந்த மதத்தின் தலைவர்களானாலும் சரி, அன்பையும் நீதியையும் சமத்துவத்தையும் மக்களிடையே பரப்புபவர்களாகத்தானே இருக்க வேண்டும்? எனவே, காலத்துக்கேற்றவாறு மதத் தலைவர்களும் மக்களை முன்னோக்கி வழி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தங்கள் மதத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுக்கு எதிராக, இன்றைய மதத் தலைவர்கள் கூட புதிய மதப் புத்தகங்களை உருவாக்கலாம். மதத்துக்குள்ளேயே காணப்படும் பல்வேறு சமூகக் குழுக்களிடமிருந்தும் அவற்றின் தலைவர்களிடமிருந்தும் எழும் அறிவுபூர்வமான கேள்விகளையும் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொண்டு, தங்களது மதங்களின் கோட்பாடுகளை முழுமையாகப் பகுப்பாய்வு செய்து பார்க்கலாம்.

அதன் மூலம் கவனத்துக்கு வரும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டு, அவற்றைக் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் ஒரு சிறு குழுவினர் ஒரு மதத்தைக் கைப்பற்றி அதைப் பின்னோக்கி நகர்த்தவோ அதைத் தவறாகப் பயன்படுத்தவோ அம்மதத்தின் தலைவர்களும் அதைப் பின்பற்றுவோரும் அனுமதிக்கக் கூடாது.

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x