Published : 06 Aug 2015 10:55 AM
Last Updated : 06 Aug 2015 10:55 AM

கொள்கை சார்ந்த அரசியல் வேண்டும்

வணிக வீதியில் இடம்பெற்ற குர்சரண் தாஸின் ‘நம் ஜனநாயகத்தைச் செப்பனிட வேண்டும்’ என்ற கட்டுரை நமது நாடாளுமன்றச் செயல்பாடுகள் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் மீதும் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தின் அடிப்படையான அரசியல் தேவை பல கட்சி அரசியல் முறையாகத்தான் இருக்க வேண்டும். தற்போதைய தேர்தல் முறையில் சிறிய கட்சிகள் தங்களுக்கென்று பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றால், பெரிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்ற வாக்கு வங்கித் தேர்தல் வழிமுறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக்கொண்ட இத்தகைய தேர்தல் கூட்டணி அரசியலால், கொள்கை அரசியல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இத்தகைய தேர்தல் முறை நீடிக்கும் வரை ஜனநாயகத்தை நாம் முழுமையாகச் செப்பனிட முடியாது.

ஒவ்வொரு கட்சிகளும் பெறக்கூடிய வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவ வாய்ப்புகளை வழங்குவதே நமது ஜனநாயகத்தை மேம்படுத்த உதவும். இன்றைக்கு சாதாரணக் குடிமகன் ஒருவர் அரசியல் அறிவில் மேம்பட்டநிலையில் இருந்தாலும், பெரிய கட்சிகளின் வேட்பாளாராகத் தேர்தலில் போட்டியிடும் வாப்பைப் பெற முடிவதில்லை.

இந்நிலையில், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள பிரிவினர்கள் எவரும் நாடாளுமன்றச் செயல்பாடுகளிலும் சட்டமன்றச் செயல்பாடுகளிலும் நேரடியாகப் பங்கேற்று தங்களது நலன்களுக்காகப் பேச முடிவதில்லை. நாடாளுமன்ற அவைகளும் சட்டமன்ற அவைகளும் அவற்றின் செயல்பாடுகளும் சாதாரண மக்களின் குரல்கள் எதிரொலிக்கும் வகையில் மாற்றமடைய வேண்டும். இந்த மாற்றங்கள் நடக்காமல் நாம் உண்மையான ஜனநாயகத்தை அடைய முடியாது.

சு. மூர்த்தி, அமைப்பாளர், மக்களாட்சிக்கான பொதுமேடை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x