Published : 08 Aug 2015 11:02 AM
Last Updated : 08 Aug 2015 11:02 AM

சுனிதி சாலமனின் உதாரண வாழ்க்கை

டாக்டர் சுனிதி சாலமனுடன் 1994 முதல் 2002 வரை பணியாற்றினேன். அப்போதுதான் எச்.ஐ.வி./எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒய்.ஆர்.ஜி. அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. எச்.ஐ.வி. குறித்து விவரமாக ஏதும் அறியாமலேயே அவருடைய அமைப்பில் சேர விண்ணப்பித்தேன். நேர்காணலில் அதை அவரிடமே தெரிவித்தேன். “பணியில் சேர்ந்துகொள், மூன்று மாதங்கள் கண்காணிப்புப் பருவம், அதன் பிறகும் உனக்கு அதிகம் தெரியவில்லை என்றால், விரும்பிய வேலைக்குச் செல்” என்று கூறி சேர்த்துக்கொண்டார்.

தமிழ் வழியில் படித்த எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் தெரியாது. எச்.ஐ.வி. தொடர்பாக நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்க ஊக்குவித்தார். நேரடியாக எனக்கு எதையும் சொல்லித்தராமல் அவர் நடத்திய கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று, அவர் அளித்த விளக்கங்களைக் கேட்க வைத்து, அதைப் பற்றிய அறிவை வளர்த்தார். எப்போது சந்தேகம் கேட்டாலும் விளக்க அவர் தவறியதே இல்லை.

1990-களிலேயே பாலியல் கல்வி பற்றிப் பேசினார். முதல் முறையாக தனியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல நேர்ந்தது, அச்சத்தால் பின்வாங்க முயன்றேன். என்னுடைய அச்சத்தைப் போக்கி, தனியாகச் செல்ல ஊக்குவித்து ஆசி வழங்கினார். தன்னுடன் பணியாற்றியவர்களின் சொந்தப் பிரச்சினைகளைக்கூட கருணையோடு கேட்டு ஆலோசனைகளைக் கூறித் தீர்த்து வைப்பார். எல்லோருடனும் உணவைப் பகிர்ந்துண்பார். எளிமை யாகவே இருப்பார். அவருடைய அன்பும் கனிவும் அரவணைத்தலும் அமைப்பில் இப்போது 500 பேர் பணிபுரியும் அளவுக்கு வளர்த்துள்ளது. மல்லிகைப் பூ, பருத்திப் புடவைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பார். யூனிசெஃப் அமைப்பில் தமிழ்நாட்டுக்கான எச்.ஐ.வி- எய்ட்ஸ் திட்ட அதிகாரியாக நான் தேர்ந்தெடுக்கப்பட அவர் அளித்த பயிற்சியும் ஆலோசனைகளும் வழிநடத்தல்களுமே காரணம். அவரைப் பற்றிய கட்டுரை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. சமூக சேவையில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவது, ஈடுபடுத்துவது எப்படி என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் சுனிதி சாலமன்.

- லதா மணி, மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x