Published : 12 Aug 2015 10:31 AM
Last Updated : 12 Aug 2015 10:31 AM

தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி

பொதிகை மலையிலே பிறந்து புன்னைக்காயலிலே கடலில் கலக்கும் புண்ணிய நதி தாமிரபரணி, தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாது தொடர்ந்துகொண்டிருக்கும் தாமிரபரணியின் கரையோரத்தில் 270-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த திருக்கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளன. தாமிரபரணியின் புகழைப் புராணப் பின்னணியோடு விளக்கும் ‘தாம்ரபர்ணீ மஹாத்மியம்’ எனும் நூலில் தாமிரபரணி இந்த உலகுக்கு வந்த சம்பவம் விளக்கப்பட்டுள்ளது.

தினமும் பக்தர்களின் பாவங்களைக் கழுவிக் கழுவி அழுக்காகும் கங்கை நதி, தன்னைப் புனிதப்படுத்திக்கொள்ள மார்கழி மாதம் தாமிரபரணியில் நீராடுவதாய் பாபநாச தலபுராணம் விளக்குகிறது. தாமிரபரணி ஓடிவரும் பொதிகை மலையில், அனைத்து நோய்களையும் நீக்கும் அரிய மூலிகைகள் லட்சக்கணக்கில் உள்ளன.

நம் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைத் தன்னுடன் சுமந்து ஓடிவரும் தாமிரபரணியின் கரை ஓரத்தில்தான் வைணவத்தின் திவ்யத் திருத்தலங்களான நவதிருப்பதிகளும், சைவ சமயத்தின் புகழ்பரப்பும் நவ கைலாயங்களும் உள்ளன. பொதிகை மலையில் பூங்குளம் எனும் இடத்தில் உருவாகி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் கடந்து பாபநாசத்துக்கு இறங்குவதை ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரையாளர் அழகான சிறுகதை போன்ற நடையோடு தருவதைப் படிக்கப் படிக்கச் சிலிர்ப்பாய் இருந்தது.

இந்திய இதிகாசங்களான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் தாமிரபரணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. காடுமலை கடந்து, நதிமூலம் கண்டு, நதியோடு நடந்து அதன் கருவூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து, இந்து வாசகர்களுக்குத் தரும் கட்டுரையாளருக்கும் ‘தி இந்து’ நாளிதழுக்கும் பாராட்டுகள். நீர்நிலைகள் மீது ‘தி இந்து’ கொண்டிருக்கும் அக்கறைக்கு இனிய நன்றிகள்!

- முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x