Published : 13 Aug 2015 10:51 AM
Last Updated : 13 Aug 2015 10:51 AM

தூக்கம் தொலைத்த கல்வி

‘தூங்க விடுங்கள்’அற்புதமான மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ஒரு நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை.

அமெரிக்காவிலும் கல்விச் சூழல் இப்படிக் குழந்தைமையைக் காவு வாங்கும் தன்மையோடு நிலவுவது அதிர்ச்சிச் செய்தியாக இருக்கிறது. இந்தியா என்று மாற்றி வாசிக்கத் தக்க - நமக்கே உரித்தான சம காலப் பிரச்சினைகளின் விவாதப் பொருள் இது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநாடு விருதுநகரில் நடந்தபோது, நெல்லை ஓவியர் வள்ளிநாயகம், ஓவியக் கண்காட்சியில், விளையாட்டுப் பொழுதைப் பறிகொடுக்கும் பள்ளி மாணவர் ஒருவர், ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்று வீட்டுப் பாடத்தில் ‘இம்போசிஷன்’ எழுதிக்கொண்டிருக்கும் காட்சியைத் தீட்டியிருந்தார்.

அருகமைப் பள்ளிகள், பொதுக்கல்வித் திட்டம், செயல்வழிக் கற்றல், தாய்மொழி வழிக் கற்பித்தல் உள்ளிட்ட அம்சங்கள் நாம் உடனடி கவனத்தில் மேற்கொள்ள வேண்டிய கல்விச் சீர்த்திருத்தங்கள் ஆகும். எனில், விளையாட்டு, ஓய்வு, உறக்கம் ஆகிய அடிப்படை விஷயங்களை இயல்பான வாழ்க்கையின் பகுதியாக உணரும் வண்ணம் குழந்தைமைப் பருவம் வாய்க்க வேண்டும்.

மதிப்பெண் சார்ந்த அணுகுமுறை, ஒப்பீடு, போட்டியில் ஓடவிட்டுக் குழந்தைகளை இடையறாது விரட்டிக்கொண்டிருக்கும் உளவியல் பெற்றோர்க்குமே உறக்கத்தைப் பறிகொடுக்க வேண்டிய சாபத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது.

- எஸ். வி. வேணுகோபாலன்,சென்னை.

***

கருப்புப் போர்வை

‘தூங்க விடுங்கள்’ கட்டுரை மனதுக்கு ஆறுதலைத் தந்தது. தூக்கம் இயற்கை தந்த வரம். சோர்வுற்ற உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்தும் ஆனந்த அனுபவம் அது.

உலகையே இருளால் அணைத்து, அனைத்துப் பொருட்களையும் அந்த இருளிலே காணாமல் போகச் செய்து, இயற்கை பரிசளித்த கருப்புப் போர்வை அது! மனிதனை மேன்மையான மனிதனாக்கும் ஜாலம் நிகழ்கின்ற நேரம் அது. மனித மாண்புகளுடன் ஒரு சராசரி மனிதனாக வாழ்வதே பெரும்பாடாக இருக்கும் இக்காலத்தில், இப்போர்வையை நாம் உதறித்தள்ளி வாழ்க்கையை இருட்டாக்கிக்கொள்ள வேண்டுமா? அதுவும் கல்வி, வாழ்க்கை முன்னேற்றம் என்ற பெயரில்.

இயற்கையாக வரும் தூக்கத்தைக் கானல் நீராக்கி, பின் அதே தூக்கத்தை வரவழைக்க தூக்க தூதுவர்களை நியமிப்பது என்பது கானல் நீரில் மீன் பிடித்த கதைதான். இந்தப் பேருண்மையை வெளிப்படுத்திய ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள்!

- ஜே. லூர்து, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x