Published : 16 Jul 2015 10:39 AM
Last Updated : 16 Jul 2015 10:39 AM

எம்.எஸ்.வி எனும் சகாப்தம்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் மறைவு, அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. கே.வி. மகாதேவன் போன்ற இசை ஜாம்பவான்கள் இருக்கும்போதே தன்னுடைய இசையையும் தனித்தன்மையுடன் வடிவமைத்தவர். கர்நாடக இசையில் மட்டுமே தன்னை நிலைப்படுத்திக்கொண்டவர் என்று எண்ணிய நேரத்தில், பாலசந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்’படம் மூலம் தன் மேற்கத்திய இசை ஞானத்தைப் பாடியும் இசையமைத்தும் வெளிப்படுத்தினார்.

- ஜ. பாரத்,மின்னஞ்சல் வழியாக…

***

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவுக்காக கருத்துப் பேழையில் அவரைப் பற்றிய கட்டுரை, தலையங்கத்தில் அவரது திறமைகளை நினைவுகூர்ந்து அவருக்கு ‘தி இந்து’ சார்பாக அஞ்சலி மற்றும் கடைசிப் பக்கத்தில் திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலிச் செய்தி என்பதோடு நின்றுவிடாமல், ரிலாக்ஸ் பக்கம் முழுவதும் அவருக்கென ஒதுக்கி நினைவஞ்சலி செலுத்தியதோடு, புதன்தோறும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் எழுதிவரும் ‘சினிமா எடுத்துப் பார்’ தொடரிலும் மெல்லிசை மன்னரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது என இசையால் உயர்ந்த ஒப்பற்ற கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தி, அவரின் புகழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்துவிட்டீர்கள்.

- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.

***

விஸ்வ* நாதம் கட்டுரை அருமை. மெல்லிசை மன்னரை முகமது பின் துக்ளக்கில் ‘அல்லா அல்லா’ பாடலை சோ பாடவைத்தார். பின் தனித்துவத்துடன் ஒலிக்கத் தொடங்கியது அவர் பாடல். எதிர்நீச்சல் படத்தில் வி.குமார் இசையமைத்திருந்தார். ஆனால், அதில் இடம்பெற்ற ‘என்னம்மா பொன்னம்மா’ என்ற பாடலை இசையமைத்தது எம்.எஸ்.வி. புதிய பறவை படத்தில் இடம்பிடித்த அத்தனை பாடல்களிலும் அவரின் அசுர உழைப்பு தெரியும்

மோகன ராகத்தில் இசையமைத்த ‘நீராரும் கடலுடுத்த…’ பாடல் அவர் சாதனையின் மணிமகுடம். வறண்ட நிலத்தில் விழும் மழைத் துளியாய் அவரது பாடல்கள் இதம். ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்... தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் என்ற வரி அவருக்குப் பொருத்தமானது

- ப. மணிகண்டபிரபு,திருப்பூர்.

***

மரங்கள் அடர்ந்த பகுதியில் தனிமையில் நடந்து செல்லும்போது, தென்றலுடன் சேர்ந்து நம்மைக் கைகோத்து அழைத்துச் செல்லும் எம்.எஸ்.வி-யின் பாடல்கள்.

உறக்கம் வராத இரவுகளில் நம் கண் இமை நனைத்து மனதைக் குளிர்விக்கச் செய்யும் அவருடைய இசை. அத்தனை இசைக் கருவிகளையும் கோபமாக, சோகமாக, தாபமாக ... மொத்தத்தில் உணர்ச்சிமிக்க மனிதர்களாக நம்மை நடமாடச் செய்கின்றன அவரது பாடல்கள்.

‘எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி… ?’ என அவர் நிம்மதி தேடியபோது, கூடவே அவர் பின்தொடர்ந்து நாமும்தான் தேடினோம், அந்த பாழாய்ப் போன நிம்மதியை. ‘நாணமோ இன்னும் நாணமோ’ - நாணித்தான் நின்றார்கள் இன்றும் பெண்கள். ‘எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே’ - பொறுத்திருக்கத்தான் தோன்றியது அந்த 'கணீர்க் குரல் ஓங்கியடித்த போது.

'உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் (டி.கே.ராமமூர்த்தியுடன் சேர்ந்து) -பெண் கேட்டபோது, என்னத்தைக் கேட்கப்போகிறாளோ என உள்ளம் பதைபதைக்கத் தான் செய்தது. இவ்வாறாக எம்.எஸ்.வி-யின் பாடல்கள் நெஞ்சினின்று அலை அலையாய் மேலெழும்பி, ஆவியாகி, பின் மழைச்சாரலாகக் கொட்டித் தீர்க்கும் ரகம். புவி இருக்கும் வரை இந்தச் சுழற்சி இருக்கும்.

இந்தச் சுழற்சியிலேயே என்றும் சுழன்று கொண்டிருக்கும் அவரது இசை!

- ஜே. லூர்து, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x