Published : 23 Jul 2015 10:43 AM
Last Updated : 23 Jul 2015 10:43 AM

‘பாகுபலி’ முதல் பலி அல்ல!

பாகுபலி பலாத்காரம்பற்றி அன்னா எம். வெட்டிகாட் எழுதிய >கட்டுரை படித்தேன். களத்தில் இறங்கி ஆணுக்கு இணையாகப் போராடும் பெண்களின் வீரத்தையும் போர்க் குணத்தையும் படத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளும் விதத்தை அவர் சரியாகவே விமர்சித்திருக்கிறார்.

ஆனால், இதுபோன்ற காட்சியைக் கொண்ட முதல் படம் பாகுபலி அல்ல. ஹாலிவுட் படங்களிலிருந்து தொடங்கி, எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் முதலான நாயககர்களின் படங்களில் இதே பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது. மசாலா படமான பாகுபலி அதே தேய்வழக்கைப் பயன்படுத்திக்கொள்கிறது.

தவிர, படத்தில் அந்த ஆண் ஏன் இப்படிச் செய்கிறான் என்னும் தேடலைக் கட்டுரையாளர் மேற்கொள்ளவில்லை. ஆண்களுக்காகவென்றே உருவாக்கப்பட்ட பிரத்யேகமான களத்தில் காலடி எடுத்து வைக்கும் பெண்களை ஆண் மனம் எப்படிப் பார்க்கிறது என்பதன் பிரதிபலிப்பே இந்தக் காட்சி. இத்தகைய பெண்களை இளக்காரமாகவோ குழந்தையைத் தட்டிக்கொடுக்கும் பரிவுணர்ச்சியுடனோ அணுகுவதே பெரும்பாலான ஆண்களின் பார்வை. தங்களது ராஜ்ஜியத்துக்குள் அத்துமீறி நுழையும் ஒரு பெண்ணை வழக்கமான ‘பெண்’ணாக மாற்றுவதுதான் ஆண்களின் முதல் வேலை.

அதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் ஒரே வழி அவளைப் பாலியல் / தாய்மை வலைக்குள் வீழ்த்துவது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கு என்ன என்பது குறித்துப் பொது மனத்தில் ஆழமாகப் படிந்திருக்கும் மதிப்பீடுகளின் விளைவே இத்தகைய காட்சிகள். இந்த மனப்பான்மையைச் சுட்டும் ஒரு சொல்லையும் கட்டுரையில் காண முடியவில்லை. அன்னா எம்.வெட்டிகாட் முக்கியமான ஒரு விஷயத்தைத் தொடுகிறார். ஆனால், ஆழமாக அதை அலசத் தவறுகிறார்.

- தாரா,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x