Published : 21 Mar 2015 10:42 AM
Last Updated : 21 Mar 2015 10:42 AM

27 வார கிராமத்துப் பயணம்

கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட பாரதிராஜாவின் படத்தைப் பார்த்த திருப்தியை ‘குருதி ஆட்டம்’ தொடர் தந்தது.

கடந்த 27 வாரங்கள் எங்களைக் கிராமத்து நினைவுகளில் மூழ்கவிட்ட வேல.ராமமூர்த்திக்கு நன்றி. நம் தேசம் அடிமைப்பட்டுக்கிடந்த காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, குறிப்பிட்ட இன மக்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் தனக்கே உரிய கதை சொல்லும் உத்தியுடன் மிகச் சிறப்பாக வாரா வாரம் எங்களைப் படிக்க வைத்திருந்தார்.

ஒரே ஒரு குறைதான்... இவ்வளவு விரைவில் கதையை முடித்திருக்க வேண்டாம்!

- கே. ராகவன்,திருச்சி.

***

மக்கள் திரள், ஐஸ்வண்டிக்காரனைச் சூழ்ந்து நிற்கும் சிறுவர்கள், பலிகடா ஆவது தெரியாமல் சிலுப்பிக்கொண்டு இருக்கும் ஆடுகள் என எங்கள் கிராமத்தில் விமரிசையாக நடைபெறும் குட்டிக் குட்டித் திருவிழாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. கதையின் சூழலுக்கேற்ற மொழி நடை அழகு. கோயில் திருவிழாக்கள் ஆன்மிகத் தடத்தைவிட்டு விலகி, பழி தீர்க்கும் களங்களாக மாறிவிட்டன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.

- கி. விஜயலட்சுமி,சென்னை.

***

கிராமத்து மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைத் தன்மை, அவர்களுக்குள் நிகழும் உறவு முறைகள், அதற்குள் எழுகிற சிக்கல், பிணக்குகள் இவற்றையெல்லாம் கதைகளின் ஊடாக வேல.ராமமூர்த்தி வெளிப்படுத்திய விதம் அருமையாக இருந்தது. நம்மிடையே வாழ்ந்துகொண்டு, நம் உறவு முறைகளாக இருந்துகொண்டு, நம் வியர்வையிலும் நம் ரத்தத்திலும் தன்னுடைய பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்ட சில முதலாளித்துவ மனோபாவம் கொண்டவர்களுக்கு எதிரான அற்புதக் கதையாக ‘குருதி ஆட்டம்’ அமைந்திருந்தது.

- சி. புனிதபாண்டியன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x