Published : 17 Aug 2016 02:43 PM
Last Updated : 17 Aug 2016 02:43 PM

அர்த்தமுள்ள விவாதம்

கல்வி உள்ளிட்ட அனைத்து சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தும் 'தி இந்து', 'புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது.

ஆயிஷா நடராஜனின் தொடக்கக் கட்டுரை, இந்தியாவில் இதற்கு முன் வந்த கல்விக் கொள்கைகளை எல்லாம் வரலாற்றுரீதியாகப் பட்டியலிட்டு, அவற்றின் சாரத்தையும் கொடுத்துள்ளது. மோடி அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கையின் மீதான ஆழமானதொரு விமர்சனத்தையும் முன்வைக்கிறது.

புதிய கல்விக் கொள்கை வரைவடிவத்தின் உள்ளீடுகள், சிறுபான்மைச் சமூகத்துக்கு மட்டுமல்ல; தலித்துகள், பழங்குடியினர், ஏழை எளிய மக்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளன. மோடி அரசின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கோட்பாட்டையும், மதவாத அரசியலையும் பிரதிபலிப்பதாகவே கல்விக் கொள்கையின் வரைவடிவம் புலப்படுகிறது.

மாநிலப் பட்டியிலில் இருந்த கல்வி இந்திரா காந்தியின் அவசர காலத்தில் சத்தமின்றி பொதுப்பட்டியலுக்கு மாறியது. இப்போது கல்வியை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றுவதற்கான எத்தனிப்பும் காணப்படுகிறது. கல்வியை மேலும் மேலும் தனியார் வசம் ஒப்புவித்துவிட்டு, அரசு பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் போக்கும் தெளிவாகிறது. மொத்தத்தில் கல்வியை முன்னோக்கி எடுத்துச் செல்லாமல், பின்னோக்கி நகர்த்த முயல்வதாகவே தெரிகிறது.

- பேரா.பெ.விஜயகுமார், முன்னாள் பொதுச் செயலர், மூட்டா.

*

மறைமுக முயற்சி

வரும் கல்வியாண்டு முதல் ப்ளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்புகளுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற செய்தி வரவேற்கத்தக்கதல்ல. ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்துவதற்கு ஒரே மாதிரியான அடிப்படைக் கட்டமைப்புகளும், தகுதியான ஆசிரியர்களும் தேவை.

ஆனால், தமிழ்நாட்டில் பல மேல்நிலைப் பள்ளிகளில் கணித, அறிவியல் ஆசிரியர்கள் கிடையாது. பல கிராமப்புறப் பள்ளிகளில் சோதனைச் சாலை வசதிகளும் இல்லை. இப்படி இருக்கும் நிலையில், ஒரே பாடத்திட்டம் அமல் என்பது கேலிக்குரியதாகும். மத்திய நுழைவுத் தேர்வைத் திணிப்பதற்காக மத்திய அரசு எடுக்கும் மறைமுக முயற்சியாகவே இதைக் கருத வேண்டி உள்ளது.

- பி.இராஜமாணிக்கம், மதுரை.

*

வாசிக்கத் தூண்டுகிறது

சோளகர் தொட்டி நாவல் மூலம் பரவலாகப் பேசப்பட்ட ச.பாலமுருகன், தற்போது சிறுகதை உலகில் ஒரு 'பெருங்காற்று' ஆக வீசியுள்ளார். பெருங்காற்று மீதான விமர்சனத்தை வைத்த டி.எல்.சஞ்சீவிகுமார், அதனை 'பொதுச் சமூகம் முன்பாக வைக்கப்பட்ட புகார் புத்தகம்'என்று அடையாளப்படுத்தியிருப்பது, புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது.

- பொன்.குமார், சேலம்.

*

நல்லுறவு கொள்ளணும்

பாகிஸ்தானின் உள்ளும் மேற்குப் புறமும் தீவிரவாதிகளால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதைத் தெளிவாக விளக்குகிறது, 'நல்ல கொள்ளி உண்டா?' தலையங்கம்.

இந்தியா மீதுள்ள வன்மத்தால் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு இப்போது அந்த நாடே சிக்கலில் தவிக்கிறது. இனியாவது, இரு நாடுகளும் சேர்ந்து இரு நாட்டிலும் உள்ள பயங்கரவாதத்தைப் போராடி அழிக்க வேண்டும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

*

இருதரப்புப் பொறுப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை - துவரங்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் மினி லாரியும் மோதிய சாலை விபத்தில் 11 பேர் பலி என்ற செய்தி படித்தேன்.

சமீப காலமாகவே தமிழகத்தில் விபத்துகளால் உயிரி ழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றாதது, அள வுக்கு அதிகமாகப் பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிச்செல்வது, குடிபோதையில் வாகனத்தை இயக்குவது போன்றவையே ஆகும்.

சாலை விதிகளை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஓரளவு சாலை விபத்துகள் குறையும். அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி நபருக்கும் பொறுப்பு இருக்கிறது.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், காக்காவேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x