Published : 07 Jul 2016 01:16 PM
Last Updated : 07 Jul 2016 01:16 PM

தவற(றை) அனுமதிக்கலாமா?

கல்வி உரிமைச் சட்டத்தில் 9-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கலாம் என்ற விதியிருப்பது, குழந்தைகள் ஒரு வகுப்பில் கற்கத் தவறியதை அடுத்த வகுப்பில் சேர்த்துக் கற்பர் என்ற நம்பிக்கையின்பாற்பட்டது.

இதுபற்றிய புரிதலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, 'ஐந்தாம் வகுப்பு வரை தேர்ச்சி அளித்துவிட்டு, பின்னர் உரிய வாய்ப்பளித்தும் தேர்ச்சி பெறாத நிலையில், அவர்களைத் தோல்வி அடையச் செய்யலாம்' என்று தேசியக் கல்விக்கொள்கை கூறுவது கல்வி உரிமைச் சட்டத்துக்கு நேர்முரணானது.

கல்வி உரிமைச் சட்டத்தில் குழந்தைகள் தோல்வியடையக் கூடாது என்று கூறுகிறதே தவிர, தான் பயில வேண்டிய வகுப்புக்குரிய திறனை அடைந்தே அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்பதில் எந்த சமரசத்தையும் அது செய்வதில்லை. இவ்வாறு செயல்படுவதற்கு ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய இடர்களைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதேநேரத்தில், ஒரு சீர்திருத்தத்தைத் தொடர்ந்து வரும் மற்றொரு சீர்திருத்தம், முந்தையதைவிட மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே சரியானது. தேசியக் கல்விக் கொள்கை ஆசிரியர்களின் திறன் வளர்ப்பு, அறிவியல் தொழில்நுட்பத்தோடு கல்வியை இணைப்பது, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது போன்றவை பற்றிப் பேசுவது நல்லதுதான்.

இவை அனைத்தும் செயல்பட பள்ளிகள் இயங்க வேண்டும். அதற்குக் குழந்தைகள் வேண்டும். அந்தக் குழந்தைகளிலும் பெரும்பான்மையோர் சாதாரண, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களிலிருந்தும் வருவர்…

இப்படிப்பட்ட அனைவருக்கும் கல்விக்கான விழிப்புணர்வானது சமூகத் தளத்தை இப்போதுதான் அடையத் தொடங்கியுள்ளது என்ற புரிதல்கள் இல்லாமல், கல்விக் கொள்கை 2016 இறுதிப்படுத்தப்பட்டுவிட்டால், அது இந்தியக் குழந்தைகளுக்கு எதிரானதாகவே அமையும்.

- முனைவர். என்.மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மதூர் கிராமம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x