Published : 29 Dec 2016 09:08 AM
Last Updated : 29 Dec 2016 09:08 AM

புதிய திசையில் திரும்புகிறதா அமெரிக்க - சீன உறவு?

தென் சீனக் கடலின் அடிப் பரப்பில் ட்ரோன் (ஆளில்லா நீர்மூழ்கி உளவு சாதனம்) ஒன்றை சீனக் கடற்படை கைப்பற்றியுள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வுசெய்யப்பட்ட பிறகு, சீன - அமெரிக்க உறவுகள் புதிய நிலை நோக்கிச் செல்வதை உணர்த்துவதைப் போல, இதையொட்டிய வார்த்தைப் பரிமாற்றங்கள் இருக்கின்றன. இந்த ட்ரோனை அமெரிக்கக் கடற்படை வீரர்கள் தற்செயலாக ஏவினார்களா அல்லது சீனப் பகுதியை உளவு பார்க்கவோ, சீண்டவோ மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என்று தெரியவில்லை. ட்ரோனைத் திருப்பித் தந்துவிடுவதாக சீனா தெரிவித்தாலும் தன்னுடைய சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக ட்ரம்ப் இதைப் பயன்படுத்திக்கொண்டார். கடலின் அடியில் விழுந்த எங்களுடைய ட்ரோனை சீனா திருடிக்கொண்டுவிட்டது என்று டரம்ப் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

முன்னதாக, தைவான் நாட்டின் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதற்காகத் தனக்குத் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்ததை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதையே சீனா கடுமையாக ஆட்சேபித்தது. தைவான் தனி நாடல்ல, தன்னுடைய நாட்டின் ஒரு அங்கமே என்பதை சீனா மீண்டும் நினைவுபடுத்தியது. உலகில் ஒரே சீனாதான், அது தான்தான் என்று பெய்ஜிங் வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. “சீனத்தோடு அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபரிசீலனை செய்வேன்” என்று தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லிவந்தார் ட்ரம்ப். அவரது பேச்சு தேர்தல் பிரச்சார உத்தியா அல்லது புதிய வெளியுறவுக்கொள்கையின் திசை மாற்றமா என்று தெரியவில்லை. வணிகம், தென்சீனக் கடல் விவகாரம், வட கொரிய அணுசக்தி அபாயம் உள்ளிட்ட முக்கியமான சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்காவுக்குச் சாதகமான சூழலை உருவாக்க விரும்புவதாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் சொல்லியிருக்கிறார். தைவான் விவகாரத்தைக் கையில் எடுப்பதன் மூலம் சீனாவோடு அவர் புதிய பேரங்களுக்குத் தயாராவதாகவே பார்க்கப்படுகிறது.

சீனாவைப் பொறுத்த அளவில் அதன் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குக் கடல்வழி வணிகம் சார்ந்து நிறையத் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. ஆனால் தென் கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தீவுகள் இருப்பதால், சீனக் கடற்படைக்கு தடையில்லாமல் அங்கு உலவுவது சாத்தியமில்லை. தைவான் விவகாரத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக சீனா எடுத்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கிய காரணம், தன் கடல் பகுதியில் என்ன செய்ய வேண்டும் என்று பிற நாடுகள் கட்டளையிடுவதைச் சீனா விரும்புவதில்லை. ட்ரம்ப் ஒருவேளை இதே பாணியில் தனது வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுசென்றால் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவும் சீனாவும் உருவாக்கிவந்த உறவுப் பாதையைச் சிக்கலுக்கு உள்ளாக்குவார். ஆசியாவில் அது பல மாற்றங்களுக்கு வித்திடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x