Published : 07 Apr 2022 06:00 AM
Last Updated : 07 Apr 2022 06:00 AM

உள் இடஒதுக்கீடு: சாதிவாரிக் கணக்கெடுப்பே சரியான தீர்வு!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தற்காலிகமாக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தைச் செல்லாது என அறிவித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரின் பிற்பட்ட நிலைமையைக் காட்டுவதற்குப் போதுமான தரவுகளின்றி, எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே அரசு இச்சட்டத்தை இயற்றியிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிவருகின்றன. சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதன் வாயிலாகவே ஒவ்வொரு சமூகத்தவரும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் எவ்வாறு பின்தங்கியுள்ளனர் என்பதற்கான விவரங்களைத் தெள்ளத் தெளிவாகப் பெற முடியும். ஆனால், இந்த முறை பெருந்தொற்றின் காரணமாகக் காலதாமதமாக மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்துவிட்டே மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நேரத்தில், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட வன்னியர் சமூகத்தவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் பின்னணியில் அரசியல் கணக்கீடுகள் இருந்தன. அச்சட்டத்தின் காரணமாகவே அதிமுக-பாமக கூட்டணிக்கான நியாயங்கள் கற்பிக்கப்பட்டன. ஏற்கெனவே, மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்துவந்த வழக்குகளின் போக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளியாக இருந்தாலும், இயற்றப்படவிருக்கும் புதிய சட்டம் குறித்து அப்போதைய அதிமுக தலைமையிலான அரசால் போதிய அக்கறை காட்டப்படவில்லை.

சமூகநீதிக் கருத்தையே தமது முதன்மைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள், தேர்தல் அரசியலுக்காக அவசரகதியில் நிறைவேற்றும் இத்தகைய இடஒதுக்கீட்டுச் சட்டங்கள், அவற்றுக்கான தேவையை நிரூபிக்கத் தவறும்பட்சத்தில், செல்லாது என்று நீதிமன்றங்களால் அறிவிக்கப்படுவதோடு, கூடவே சமூகநீதிக் கொள்கையையும் பலவீனப்படுத்திவிடுகின்றன.

வன்னியர் சமூகத்தின் அரசியல் குரலாக ஒலிக்கும் கட்சிகளும் அமைப்புகளும் மட்டுமின்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் அடங்கும் மற்ற சமூகங்களின் அமைப்புகளும்கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி அறிவியல்பூர்வமான முறையில் பிற்படுத்தப்பட்ட நிலையை உறுதிப்படுத்தி, அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டும் தீர்ப்புகளுக்கு இசைந்ததாக அமையும்.

வாக்கு வங்கிக் கணக்கீடுகளோடு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை அணுகுவது மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களிடையே தேவையற்ற கருத்து முரண்பாடுகளை உருவாக்கி, சமூக நல்லிணக்கத்தைக் குலைத்துவிடக்கூடும் என்பதை இனிமேலேனும் தமிழ்நாடு அரசு உணர வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் இடைக்கால ஏற்பாடுகளை நாடுவது மிகவும் பிற்பட்ட நிலையில் இருக்கும் மற்ற சமூகங்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. கல்வியிலும் சமூக நிலையிலும் பின்தங்கியுள்ள அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அது அவரவர் நிலைக்கேற்ப அறிவியல்பூர்வமாக அமைய வேண்டும். அதுவே சமூகநீதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x