Published : 18 Nov 2021 03:06 AM
Last Updated : 18 Nov 2021 03:06 AM

அம்மா உணவகங்கள்: பேரிடர்க் காலத்தின் அமுதசுரபித் திட்டம்

சென்னையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையின்றி உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அக்டோபர் 10 தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் ஏறக்குறைய ஏழரை லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களிலிருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. தவிர, சமூகச் சமையலறைகளும் உருவாக்கப்பட்டு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களில் குறைவான விலையில் உணவளிக்கும் அம்மா உணவகங்களும் அவற்றின் கட்டமைப்புகளும் இயற்கைப் பேரிடர்களின்போது சமூகச் சமையலறைகளாகவும் பயன்படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

கேரளத்தில் பேரிடர்க் காலங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் சமூகச் சமையலறைகள் திட்டத்தோடு தமிழ்நாட்டின் அம்மா உணவகங்களும் ஒப்பிடத்தக்கவை. கரோனா முன்தடுப்புக்காகப் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்தபோது தங்கும் வசதியற்ற நிலையில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் நோய்த் தொற்றுக்கு ஆளாகித் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கும் உதவும் வகையில் கேரளம் முழுவதும் சுமார் 1,200 சமூகச் சமையலறைகள் செயல்பட்டன.

ஏற்கெனவே, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் கேரளம் சந்தித்த பெருவெள்ளங்களின்போது இந்தச் சமையலறைகள் மக்களின் பசியாற்றும் பணியைச் செய்தன. உள்ளாட்சி அமைப்புகளும் குடும்பஸ்ரீ திட்டத்தைச் சேர்ந்த மகளிர் குழுக்களும் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தின. தமிழ்நாட்டிலோ, இயற்கைப் பேரிடர்களில் சமூகச் சமையலறையாகச் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்கள், மற்ற நாட்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்குப் பசியாற்றும் குறைந்த விலை உணவகங்களாகத் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டின் அம்மா உணவகம் திட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நமது பக்கத்து மாநிலங்களும் குறைந்த விலை உணவகங்களைத் தொடங்கியுள்ளன. ஆந்திரத்தில் அண்ணா என்டிஆர் என்ற பெயரிலும், கர்நாடகத்தில் இந்திரா என்ற பெயரிலும் இவ்வகையான உணவகங்கள் தொடங்கப்பட்டன. ஹைதராபாத் பெருநகர எல்லைக்குள் குறைந்த விலையில் மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பெருநகரங்கள் குறைந்த ஊதியம் பெறும் உடலுழைப்பாளர்களையும் உள்ளடக்கியது என்ற மனிதநேயப் பார்வையே இந்தத் திட்டத்தின் வெற்றி.

ஒரு சிறந்த அரசாங்கம் தொலைநோக்குப் பார்வையில் புதிய திட்டங்களைத் தொடங்குவது எவ்வளவு முக்கியமோ, அதுபோல முந்தைய ஆட்சிக்காலங்களில் தொடங்கப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர வேண்டியதும், இன்னும் மேம்படுத்த வேண்டியதும் முக்கியம்.பெருங்கோயில்களில் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட முழுநாள் அன்னதானத் திட்டங்களைத் திமுக அரசு விரிவுபடுத்தியுள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் கோயில் அன்னதானத் திட்டத்தின் எல்லை மருத்துவமனைகள் வரைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அம்மா உணவகங்களை இன்னும் மேம்படுத்தவும் விரிவுபடுத்தவுமான முயற்சிகளை எடுக்க வேண்டும். மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அம்மா உணவகங்கள் திட்டமானது ஆட்சிமாற்றத்தால் முடிவுக்கு வருமோ, பெயர்மாற்றத்தைச் சந்திக்குமோ என்றெல்லாம் அஞ்சப்பட்டுவந்த நிலையில் அத்திட்டம் அதே பெயரில் தொடரும் என்ற நம்பிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். ஜெயலலிதாவைப் போலவே ஸ்டாலினையும் பசி தீர்ந்த வயிறுகள் வாழ்த்திக்கொண்டிருக்கும்.

ஆடியோ வடிவில் கேட்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x