Published : 27 Aug 2016 09:29 AM
Last Updated : 27 Aug 2016 09:29 AM

வருமுன் காப்போம்!

சென்னையில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு. இன்னும் இரண்டே மாதங்களில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் பாதிப்பை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. ஏரிகள் ஆக்கிரமிப்புதான் பெரும் பாதிப்புக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதில் சீமைக் கருவேல மரங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சென்னையின் பெரும்பாலான ஏரிகள், கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகளின் வடிநிலங்கள், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பக்கிங்காம் கால்வாய்கள், ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், வேளச்சேரி கால்வாய், வீராங்கல் ஓடை உள்ளிட்ட சென்னையின் வெள்ளத் தணிப்புக் கால்வாய்களின் கணிசமான பகுதிகளை சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன.

தமிழகத்தில் வேலிக்காகவும் எரிபொருள் தேவைக்காகவும் 1950-களில் அறிமுகமாகின, ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சீமைக் கருவேல மரங்கள். விரைவாக விதைப்பரவல் செய்யும் இவை, இன்றைக்குத் தமிழகத்தின் 25% விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. 13 மாவட்டங்களில் 2.10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இம்மரங்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ‘நச்சு மரங்கள்’ பட்டியலில் இருக்கும் இந்த மரம், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சீமைக் கருவேல மரங்களை அழிப்பதற்கான திட்டம் மற்றும் வழிமுறைகள் அடங்கிய அறிக்கையை 2016 ஜனவரியில் அளிக்க வேண்டும் என்று கடந்த 2015 அக்டோபரில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து வனத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறைச் செயலர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் பின்பு இந்தக் குழு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதற்கிடையே பொதுப்பணித் துறை கருவேல மரங்களை அழிக்க ரூ.809 கோடி தேவை என்று தெரிவித்தது.

கடந்த 2011-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது சீமைக் கருவேல மரங்களை அழிப்பது குறித்து நிறைய பேசினார். எனினும், காரியங்கள் நடக்கவில்லை. இப்போது அவற்றை அழிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இனிமேலாவது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசு உணர்ந்து தீவிரமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

இந்தத் திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்படாததற்கு அதிகாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படும் ஒரு விஷயம், நிதிப் பற்றாக்குறை. உதாரணத்துக்கு, 2.10 லட்சம் ஹெக்டேர் கருவேல மரங்களை அழிக்க பொதுப்பணித் துறை நிர்ணயித்த செலவு ரூ.809 கோடி. ஆனால், ஒதுக்கீடே செய்யப்படவில்லை. இதனிடையே, அவ்வளவு செலவு தேவையில்லை என்று இன்னொரு யோசனை சொல்கிறார்கள் இந்த மரங்களை அழிப்பதில் ஈடுபட்டுவரும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். மக்கள் குழுக்களோடு இணைந்து அரசே கூட்டு வேலையில் ஈடுபடுவதே அது.

அரசு நினைத்தால் சீமைக் கருவேல மரங்களை அழிப்பது சாத்தியம்தான். ஆனால், அரசால் மட்டுமே சாத்தியமாகாது. ஏற்கெனவே, இதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், இளைஞர்கள், என அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து விரிவான செயல்திட்டத்தை மனச் சுத்தியுடன் உருவாக்க வேண்டும். அப்போதுதான் சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற முடியும். அதற்கு இதுதான் சரியான தருணமும்கூட!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x