

நோய்களுக்கு எதிராக நாம் ஒரு அடி எடுத்துவைத்தால், நோய்கள் நான்கு அடி பாய்கின்றன. காசநோய் இறப்புகள் கடந்த 23 ஆண்டுகளில் 45% வரை குறைந்திருக்கின்றன; நோய்ப் பரவல் தடுப்பு 37% என்று சொல்கிறது உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை. மேலோட்டமாகப் பார்க்கும்போது சந்தோஷமான செய்தி இது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கோடு ஒப்பிட்டால், பாதிக்கும் கீழேதான் தொட்டிருக்கிறோம்.
இந்தியாவுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. உலகெங்கும் 86 லட்சம் பேர் கடந்த ஆண்டு காசநோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; இந்தியாவில் மட்டும் இந்தக் கணக்கு 28 லட்சம் பேர். அதாவது 26%. கணக்கெடுப்புக்குள் வராத நோயாளிகளை உள்ளே கொண்டுவந்தால் இன்னும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஏனென்றால், ரொம்பவும் தாமதமாக, ஏகப்பட்ட தயக்கத்துடன் கடந்த ஆண்டுதான், ‘தனியார், அரசு மருத்துவமனைகள் காசநோயைக் ‘கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டிய நோய்’எனக் கருத வேண்டும்’ என்று இந்திய அரசு அறிவித்தது. இன்னமும்கூட, தனியார் மருத்துவமனைகள் காசநோயாளிகளின் விவரங்களை அரசுக்கு அறிவிப்பது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
உலகெங்கும் கடந்த ஆண்டு காசநோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 30 லட்சம் பேர் இந்தக் கணக்கெடுப்பில் வராமல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. இந்தியாவில் மட்டுமே இந்த அளவுக்கு இருக்கலாம். ஏனென்றால், சிறார் - இளையோர் கணக்கெடுப்பும் இந்தியாவில் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. எப்படியும் காசநோய் இந்தியச் சுகாதாரத் துறைக்கு ஒரு சவால் என்பதையும் சர்வதேச அளவில் காசநோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னடைவை உருவாக்கும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும் உலக சுகாதார அறிக்கை இன்னொரு முறை சுட்டிக்காட்டுகிறது; அழுத்தமாக. கவலை அளிக்கும் இன்னொரு விஷயம்: மருந்து-எதிர்ப்புச் சக்தி கொண்ட ஒரு வகை காசநோய் பரவுவது இந்தியாவில் அதிகரித்துவருகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளில் நோய், மருந்துகள் போன்றவற்றைப் பற்றி தொடர்ந்து நாம் விவாதிக்கும் இந்தத் தருணத்தில், நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு: நோய்க்கு எதிரான போராட்டத்தில் மருந்துகளுக்குக் கொடுக்கும் கவனத்தில் எத்தனை பங்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளுக்குக் கொடுக்கிறோம்? 2011ல் உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் 15-வது இடத்தில் - ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினையில் பல ஆப்பிரிக்க நாடுகளைவிட மோசமான இடத்தில் இருக்கும் - ஒரு நாட்டில் இது சிந்திக்க வேண்டிய விஷயம். காசநோய் சிகிச்சையையே எடுத்துக்கொண்டால், ஒருகாலத்தில் நம் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இறைச்சி கொடுப்பதும் சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்ததை இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
நோய்களுடனான போராட்டத்தில், நோயாளிகளிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது முக்கியம் என்று எல்லா மருத்துவ முறைகளுமே சொல்கின்றன. மருந்து நிறுவன லாபிகளையும் தாண்டி சிந்தித்தால்தான் நோயை முழுமையாக வெற்றிகொள்ள முடியும்!