பாலைவனத்தில் தவிக்கும் இந்தியர்கள்

பாலைவனத்தில் தவிக்கும் இந்தியர்கள்
Updated on
2 min read

பொருளாதார மந்தநிலை காரணமாகவும் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய விலை வீழ்ச்சி காரணமாகவும் பெட்ரோலிய வள நாடுகள் குறிப்பாக, சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் அவல நிலை உருவாகியிருக்கிறது. அன்றாடச் சாப்பாட்டுக்கே வழியின்றி பட்டினியில் வாடுகின்றனர். சவுதியில் மட்டும் இப்படி 10,000 தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.

சவுதியிலிருந்து இவர்கள் வெளியே வர முதலில் விசா நடை முறைகளை விரைந்து முடிக்குமாறு சவுதி அரசைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசு, இவர்களுடைய ஊதிய நிலுவையை வழங்கவும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இவர்களை விமானத்தில் அழைத்துவர முதலில் திட்டமிட்டிருந்தனர்.

தொழிலாளர்களை மீட்க வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத்தக்கது என்றாலும், இந்த நெருக்கடியை முன்கூட்டியே உணர அரசு தவறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவது கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக 2015-16-ல் குறைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டுகிறது ‘கிரைசில்’ அறிக்கை.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகையில் ரூ.2.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்குத் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கும் தொகையில் 50% கிடைக்கிறது. அப்படி அனுப்பும் தொகையில் 40% அதாவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் கேரளத்துக்கு மட்டும் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளத்திலிருந்து வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கு 24 லட்சம் பேர் வேலைக்காகச் செல்கின்றனர். அவர்களில் 11 லட்சம் பேர் திரும்புகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் வரிகளை உயர்த்திவிட்டன, அரசின் செலவுகளைக் குறைத்துவிட்டன. நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க அவை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதனால், கட்டுமானத் துறை, விருந்தோம்பல் துறை உட்பட பலவற்றில் தொழிலாளர்கள் வேலையிழப்பது அதிகரித்துவருகிறது. சமீப காலமாகப் பிற ஆசிய நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களின் போட்டி காரணமாக இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் சென்று குடியேறுவோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது.

வளைகுடா நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அனுப்பும் தொகை மட்டும் கேரளத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 22% அளவுக்கு இருக்கிறது. அது மேலும் தேய்வதால் கேரளத்தின் பொருளாதாரத்துக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும். அரசும் தனியாரும், கிராமங்களிலும் நகரங்களிலும் முதலீடுகளைப் பெருக்கினால் தவிர, கேரளத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை தருவதும், வருமானத்தைத் தக்க வைப்பதும் இயலாததாகிவிடும்.

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை இப்போதைக்கு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் இல்லாததாலும் இந்நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற போக்கு அதிகரித்துவருவதாலும், மேலும் பல இந்தியத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்திய அரசு அதற்கான முன் தயாரிப்புகளை இப்போதே மேற்கொள்வது அவசியம். இல்லையென்றால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in