Published : 21 Sep 2018 09:21 AM
Last Updated : 21 Sep 2018 09:21 AM

வங்கிகள் இணைப்பு விஷயத்தில் நிதானமான அணுகுமுறை தேவை!

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. வியாபாரத்திலும் லாபம் ஈட்டுவதிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் அரசு வங்கிகளை, வாராக் கடன் சுமையால் தத்தளிக்கும் அரசு வங்கிகளுடன் இணைக்கும் உத்தியை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இணைப்புக்குப் பிறகு, இது நாட்டிலேயே மூன்றாவது பெரிய வங்கியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. வாராக் கடன் சுமை அதிகரித்திருக்கும் நிலையில், மத்திய அரசு இப்படி முடிவெடுத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், இதன் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இணைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானவுடனேயே பரோடா, விஜயா வங்கிகளின் பங்கு மதிப்புகள் சரிந்தன. தேனா வங்கியின் பங்கு மதிப்பு மட்டும் உயர்ந்தது. முறையாக நிர்வகிக்கப்படாமல் மிகவும் நெருக்கடியான நிதி நிலையில் இருக்கும் தேனா வங்கி, ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் திருத்த நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. அதேசமயம், மற்ற இரு வங்கிகளைவிடவும், தேனா வங்கியின் பங்கு வாங்கியவர்களுக்கு இழப்புக்குப் பதில் லாபம் கிடைக்கப்போகிறது.

கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று இணை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. தொல்லைகளில் சிக்கித் தவித்த ஐடிபிஐ வங்கியின் பங்குகளை எல்ஐசி நிறுவனம் வாங்கி, அதை நிலைப்படுத்தியது. இவையெல்லாமும் அரசின் தன்னிச்சையான முடிவுகளே. வலுவற்ற வங்கிகளை வலுவான வங்கிகளுடன் இணைக்கும் கட்டாய முடிவால், நல்ல வங்கிகளுக்குத்தான் சுமை கூடும். ஆனால், வாராக் கடன் பிரச்சினைகளுக்கு இது தீர்வாகாது. இணைப்புக்குப் பிறகு எல்லா வங்கிகளும் வலுவற்ற வங்கிகளாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். வங்கிகளை இணைப்பது, வலுவற்ற வங்கிக்கு உயிர் கொடுப்பதைப் போல என்பதால் இந்நடவடிக்கை கூடாது என்றும் நிராகரித்துவிட முடியாது. இணைப்புக்குப் பிறகு புதிய நிர்வாகம் எப்படி அமையப்போகிறது, வங்கியின் செயல்திறன் எப்படி அதிகரிக்கப்போகிறது என்பதுதான் முக்கியம். அரசுத் துறையில் ஏராளமான வங்கிகள் இருப்பதால் இப்படி வங்கிகளை இணைப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கதும்கூட.

அரசு வங்கிகளைப் பொறுத்தவரை அரசுதான் பெரும்பான்மை பங்குதாரர். அதற்காக சிறுபான்மைப் பங்குதாரர்களின் கருத்தைக் கேட்காமலும் ஒப்புதலைப் பெறாமலும் தன்னிச்சையாக முடிவெடுப்பது நல்லதல்ல. பரோடா வங்கியின் பங்குகளின் மதிப்பில் 16% சரிந்திருப்பதால், பங்கு வைத்திருப்பவர்கள் அதிருப்தி அடைவதும் நியாயமே. இந்த முடிவு முதலில் அந்தந்த வங்கிகளின் வாரியக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிரடியான வேகத்தைக் காட்டிலும் நிதான அணுகுமுறைதான் கைகொடுக்கும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x