

நீலகிரி மலையில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பாறை ஓவியங்கள் அடங்கிய வெள்ளரிக்கோம்பையைக் காண வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் திட்டம். ஒரு கோடைக் காலத்தில் அதற்கான பயணம் அமைந்தது. சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று, அங்கிருந்து கோத்தகிரி பேருந்தில் ஏறி ‘மாமரம்' என்ற இடத்தில் இறங்கினோம்.
அங்கு ஒரு கடைக்காரர், “இங்கிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது. இடையில் ஒரு குடியிருப்பு வரும், அங்கே ஆர்.கிருஷ்ணா என்கிற ஓவியர் இருப்பார். அவரைச் சந்தித்தால் ஏற்பாடுசெய்வார்” என்றார். ஒற்றையடிப் பாதையில் இரண்டு கி.மீ. பயணித்தோம். இடையில் வீடுகளையோ மனிதர்களையோ பார்க்க முடியவில்லை.
யானைகளின் லண்டங்களையும் (கழிவு), காட்டுப்பன்றிகள் தோண்டிய குழிகளையும் மட்டுமே காண முடிந்தது. ஒருவழியாகக் குடியிருப்புப் பகுதியை அடைந்தோம். மெலிந்த தேகம் கொண்ட ஓர் இளைஞர் புன்னகையோடு எங்களை வரவேற்றார். அவரது வீட்டு வாசலில் ‘கிருஷ்ணா ஆர்ட் ஸ்டுடியோ’ என எழுதப்பட்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. நாங்களும் ஓவியர்கள் என்று சொன்னதும் இன்னும் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.
வெள்ளரிக்கோம்பை ஓவியங்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல, தனது மாமா மாணிக்கத்தை அறிமுகப் படுத்தினார். அவர் கையில் ஒரு சிறு அரிவாளை எடுத்துக் கொண்டு எங்களை வழிநடத்தினார். “அடுத்த மூன்று கி.மீ. பகுதி சற்று ஆபத்தானது; யானைகளும் காட்டு மாடுகளும் பகலிலும் உலாவரும்.
அதனால் ஓசையெழுப்பாமல் என்னைத் தொடர்ந்து வாருங்கள்” என எச்சரித்தார். ஒருவழியாக ஓவியங்கள் வரையப்பட்ட ‘தேன்பாறை’யைச் சென்றடைந்தோம். உயரமான பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் குறியீட்டு வடிவங்களில், சிவப்பு வண்ணத்தில் பரவியிருந்தன. நெடுநாள் கனவு பலித்த திருப்தியில், அங்கிருந்து இறங்கத் தொடங்கினோம். வேகமாகத் திரும்பிய நாங்கள், இரண்டு மணி நேரத்தில் மீண்டும் கிருஷ்ணாவின் வீட்டை அடைந்தோம்.