

இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்துக்கே எழுத்தறிவு குறித்துப் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஒரு தமிழர் - இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது அல்ல. புகழ்பெற்ற கல்வியாளர் மால்கம் ஆதிசேஷய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரிந்த உண்மைதான் இது.
யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு 1965ஆம் ஆண்டு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றபோது, மக்களிடம் உள்ள எழுத்தறிவின்மையைப் போக்குவதைப் பற்றி விவாதம் நடத்தப்பட்டது. இதன் பயனாகப் பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை யுனெஸ்கோ முன்னெடுத்தது. இம்மாநாடு நடத்தப்பட்ட செப்டம்பர் 8ஆம் தேதியை ‘உலக எழுத்தறிவு’ நாளாக 1966ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்து 60 ஆண்டுகள் ஆகின்றன.
பாரிஸ் நகரில் ஒவ்வோர் ஆண்டும் எழுத்தறிவுக்காகப் பங்களித்த நிறுவனத்துக்கு, செப்டம்பர் 8ஆம் நாள் யுனெஸ்கோ ‘உலக எழுத்தறிவுப் பரிசு’ வழங்கிக் கௌரவிக்கும். ஒவ்வோர் ஆண்டும் பரிசுக்கு உரிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தவறாமல் இடம்பெற்றதுடன், அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகவும் அழைக்கப்பட்டவர் மால்கம் ஆதிசேஷய்யா (1910-1994).
இவர் யுனெஸ்கோவில் பணியாற்றிய 23 ஆண்டுகளில் பல்வேறு கல்வி, அறிவியல், பண்பாட்டுத் திட்டங்களை அதன் உறுப்பு நாடுகளில் மிகத் திறம்படச் செயல்படுத்தியவர்.
உலக நாடுகளுக்கு மிகச் சிறந்த கல்விப் பங்களிப்பு செய்த ஆதிசேஷய்யாவைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு, யுனெஸ்கோவுடன் இணைந்து ஆதிசேஷய்யா எழுத்தறிவுப் பரிசை (15,000 அமெரிக்க டாலர்கள் தொகையுடன்) 1998ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு வழங்கியது. யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாது, இந்தியாவிலும் பல்வேறு எழுத்தறிவுத் திட்டங்களை ஆதிசேஷய்யா முன்னெடுத்து வெற்றிகண்டார்.
வறுமையை ஒழிக்க...
வறுமையை ஒழிப்பதற்கும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமான முக்கியக் கருவி கல்வியே என்றவர் மால்கம் ஆதிசேஷய்யா. மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ஆதிசேஷய்யா மாநிலங்களவை உறுப்பினராக (1978) நியமிக்கப்பட்டார்.