

அஞ்சல்வழிக் கல்வியாகத் தொடங்கிய திறந்தநிலை - தொலைநிலைக் கல்வி, இன்று செயற்கை நுண்ணறிவு, இணையம், பல்லூடகத் தொழில்நுட்பங்களின் ஆதரவுடன் உலக உயர் கல்வியின் வலிமையான இயக்கமாக வளர்ந்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT), பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உள்ளிட்ட முன்னணிக் கல்வி நிறுவனங்கள் இம்முறையை ஏற்று, நடைமுறைப்படுத்தி, உயர் கல்வி அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்கச்செய்து வருகின்றன.
தொடக்கம்
பிரிட்டனைச் சேர்ந்த கல்வியாளர் சர் ஐசக் பிட்மேன் 1840ஆம் ஆண்டு உலகக் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். தான் கற்பித்த சுருக்கெழுத்து முறைக்கான பாடங்களையும் பயிற்சித் தாள்களையும் மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பினார். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே அவற்றைப் படித்து, தங்கள் பதில்களை மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பினர்.
ஆசிரியர் அவற்றைத் திருத்திக் குறிப்புகளுடன் திருப்பி அனுப்பினார். இவ்வாறு ஆசிரியர்–மாணவர் இடையே தொடர்ச்சியான கற்றல் - கற்பித்தல் தொடர்பை உருவாக்கிய இந்தப் புதுமையான முறை, அஞ்சல்வழிக் கல்வியின் தொடக்கமாக அமைந்தது. பின்னர், இதுவே திறந்தநிலை - தொலைநிலைக் கல்வி (ODL) முறையாக வளர்ந்து, உலகக் கல்வி வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் கல்வி நிலை
இந்தியாவின் மக்கள்தொகை ஏறக்குறைய 147 கோடி. 18–23 வயதுக்கு உள்பட்ட உயர் கல்வி பெறும் வயது உள்ளவர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கும் அதிகம். இத்தகைய மிக அதிக இளையோர் மக்கள்தொகைக்கு உயர் கல்வி வழங்குவது இந்தியாவின் மிகப்பெரிய சவால்.
அகில இந்திய உயர் கல்வி ஆய்வு அறிக்கையின்படி (AISHE 2021–22), இந்திய உயர் கல்வியின் மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) 28.4%. அதாவது, உயர் கல்வி பெறத் தகுதியுடைய 100 இளையோரில் சராசரியாக 28 பேர் மட்டுமே உயர் கல்வியில் சேர்கின்றனர். இதன் பொருள் 70%க்கும் அதிகமான இளையோர் இன்னும் உயர் கல்வி பெற முடியாமல் உள்ளனர் என்பதுதான்.
2035ஆம் ஆண்டுக்குள் உயர் கல்வியின் மொத்தச் சேர்க்கை விகிதத்தை 50%ஆக உயர்த்தும் இலக்கைத் தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) நிர்ணயித்துள்ளது.
உயர் கல்வி ஆய்வு அறிக்கையின்படி (2021-22) இந்தியாவில் மொத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை ஏறக்குறைய 4.33 கோடி. இதில் சுமார் 3.7 கோடி மாணவர்கள் வழக்கமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயில்கின்றனர்.