திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | ‘திராவிட மாடல்’ அரசின் திசைவழி எது?

திமுக 2 ஆண்டுகள் ஆட்சி | ‘திராவிட மாடல்’ அரசின் திசைவழி எது?
Updated on
3 min read

சட்டமன்றத் தேர்தல் 2021 சமயத்தில், தமிழ்நாட்டில் நிலவிய சூழல் பலருக்கும் நினைவிருக்கும். கரோனா பரவல், பொதுமுடக்கம், நிலைகுலைந்த வாழ்வாதாரம் என நிலைமை மோசமாக இருந்தது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம், நீட் தேர்வு எனப் பல்முனைத் தாக்குதல்கள் இருந்த நிலையில், அதிமுக அரசு பாஜகவிடம் காட்டிய பயம் கலந்த பணிவும் மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

அப்போது மிகவும் நம்பிக்கை அளித்த திமுக கூட்டணிக்குப் பெரும்பாண்மை மக்கள் வெற்றியைத் தந்தனர். ஆட்சிக்கு வந்தவுடனேயே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய சவாலைத் திமுக அரசு திறமையுடன் எதிர்கொண்டது மக்களுக்கு நம்பிக்கையளித்தது. பிற விஷயங்களில் அரசின் செயல்பாடு எப்படி இருந்தது / இருக்கிறது எனப் பார்க்கலாம்.

மாநில சுயாட்சி: முதன்முறையாக மத்திய அதிகாரம் என்பது பல்வேறு மாநிலங்களில் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாநில சுயாட்சி என்னும் கோரிக்கையின் தாயகமான தமிழ்நாட்டில் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, நீட் தேர்வு உள்ளிட்ட இந்தியா முழுமைக்குமான ஒற்றை பொதுத் தேர்வுகளை ஒழிப்பது போன்றவை இந்த ரீதியிலான முக்கியக் கோரிக்கைகளாகும். இந்திய அளவில், மாநிலங்களின் தனி இறையாண்மையை அழித்து ஓர் ஒற்றை ஆட்சியை அமைக்க யத்தனிக்கும் முயற்சிகளுக்குத் தடை போட வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை மறுத்துத் தமிழ்நாடு அரசு, தனி கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் முன்னெடுப்புகளும் உரைகளும் இவ்விஷயத்தில் சரியான திசைவழியைக் கட்டமைக்கின்றன எனலாம். மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றுதான் அழைக்க வேண்டும் என்பதும், நிதிப் பங்கீட்டில் மாநில உரிமையைத் தத்துவார்த்த ரீதியாக விவாதப்பொருளாக மாற்றியிருப்பதும் நாளைய இந்திய வரலாற்றைக் கட்டமைக்கும் அடிக்கற்களாகும்.

இதனை மத்திய அரசு ஆளுநர் மூலமாகத் தடுக்க முயல்வதும் ‘தமிழ்நாடு’ என்னும் பெயரைப் பயன்படுத்துவதையே தவிர்க்க அவர்கள் முயன்றதையும் அதற்காக திமுக அரசு போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

கல்வியில் அழுத்தம்: எனினும், இன்னும் தமிழ்நாட்டுக்கான தனி கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டிருந்தாலும், இன்னமும் கொள்கை இறுதிசெய்யப்படவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் வலுவிழந்திருக்கின்றன. ‘கியூட்’ [Common University Entrance Test - CUET] போன்ற தேர்வுகள் கேள்விகளே இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

எல்லாருக்குமான பொதுக் கல்வி என்கிற அமைப்பைச் சிதைத்து, கல்வி என்பதைச் சிறப்புத் தகுதிக்குரியதாக்கி, சிலருக்கு மட்டுமானதாக மாற்றிவிட வேண்டும் என்பதே பாஜகவின் தத்துவம். மாநிலங்கள் உறுதியாக இல்லாவிட்டால் அனைவருக்குமான கல்வி, அனைவருக்குமான சமவாய்ப்பு பறிபோய்விடும். தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை இதனைத் திறம்பட எதிர்கொள்கிறதா என்கிற கேள்வி இருக்கிறது.

‘இல்லம் தேடிக் கல்வி’, கல்வி அமைப்புக்குள் சமூக ஆர்வலர்களின் ஊடுருவல் போன்றவை எல்லாம் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளேயன்றி வேறல்ல. தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலக் கல்விக் கட்டமைப்பின் வளர்ச்சி என்பது ஆழ்ந்து கவனத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டியதாகும். அதற்கான உறுதியான செயல்பாடுகள் அரசிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தித் திணிப்பு: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் எண்ணிக்கை பெருகிவருவதைத் தொடர்ந்து மாநிலத்தின் உள் மாவட்டங்களிலேயே இந்தியில் பெயர்ப் பலகைகள் பெருகிவருகின்றன. ஒரு கலாச்சாரப் படையெடுப்பு நிகழத் தொடங்கியிருக்கிறது. இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு என்ன வழிகள் வைத்திருக்கிறது என்பதில் தெளிவில்லை. இவற்றை முறைப்படுத்தும் ஆணைகளும் சட்டங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

மண்ணின் மைந்தருக்கு 80% வேலைவாய்ப்பு: மத்திய அரசின் பணிகளைத் தாண்டி, மாநில அரசின் வேலைவாய்ப்புகளைப் பெறக்கூட தமிழ் தேவையில்லை என்கிற நிலையை அதிமுக அரசு ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத தமிழ் மொழியறிவு அவசியம் என்கிற நிலையைத் திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

அதேவேளையில், ‘மண்ணின் மைந்தருக்கு 80% வேலை’ என்பது வெறும் மாநில அரசுப் பணிகளை மட்டும் குறிப்பிடும் முழக்கம் அல்ல. இதை நிறைவேற்ற அரசு என்ன முயற்சிகளை எடுக்கவிருக்கிறது என மக்கள் கூர்ந்து கவனித்துவருகிறார்கள்.

மகளிர் மேம்பாடு: கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட சில மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் பாராட்டத்தக்கவை. ஆனால், பெண்களைச் சமுதாய அரசியல் ஆளுமைச் சக்தியாக வளர்த்தெடுப்பதற்கான திட்டமாக ‘கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை’ திட்டத்தை மட்டுமே கருத முடிகிறது.

பெண்கள் இதுவரை ஈடுபடாத தொழில்களில் அவர்களின் இருப்பை உருவாக்குவது, அனைத்துத் தொழில்களிலும் அவர்களை ஆளுமைகளாக உருவாக்குவது என்கிற திசையில் இன்னும் பல திட்டங்கள் தேவைப்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழு என்கிற கடன் வழங்கும் திட்டத்தைத் தாண்டி குறிப்பிட்ட தொழில்களில் பெண்களை வளர்த்தெடுப்பது என்கிற நிலையை நமது திட்டங்கள் அடைய வேண்டும்.

கச்சத்தீவு விவகாரம்: தமிழ்நாட்டின் கடல்சார் மேலாண்மைக்கான திட்டங்கள் இன்னமும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கின்றன. சேது சமுத்திரத் திட்டம் இன்னும் கனவாகவே உள்ளது. கச்சத்தீவைத் தாரைவார்த்தபோது ஒப்புக்கொள்ளப்பட்ட அளவில்கூட தமிழ்நாடு மீனவர்கள் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

அது முழுமையாக இலங்கைக் கடற்படையினரின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டது; பெளத்த அடையாளங்களை அங்கு நிறுவுவதன் வாயிலாக இலங்கை தனது ஆதிக்கத்தின் அடுத்த மைல்கல்லை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கத்தான் செய்கிறார். ஆனால், ‘கச்சத்தீவு மீட்பு’ எனும் இலக்கை நோக்க்கி நகர இன்னும் பல செயல்திட்டங்கள் அவசியம்.

தொழிலாளர் நலன்: அமைப்புசார் தொழில்கள் என்று பார்க்கும்போது, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

போதாக்குறைக்கு, போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும்முயற்சி நடப்பது வருத்தத்துக்குரியது. பொதுத் துறைகளைத்தனியார்மயமாக்கும் பாஜகவின் நிலைப்பாடுதான் அக்கட்சி மீதான அதிருப்தியைப் பரவலாக ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசு இதை மனதில் கொள்ள வேண்டும்.

அமைப்புசாராத் தொழிலாளர்கள் எனப் பார்த்தால், வட இந்தியத் தொழிலாளர்கள், குறைந்த கூலிக்கும் நீண்ட நேர வேலைக்கும் தயாராக இருப்பதால் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குடிப்பழக்கம் காரணமாகவும் நமது இளைஞர்களின் வேலைத்திறன் குறைந்துள்ளது என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

பட்டதாரிகளை உருவாக்குகிற அளவுக்கு வேலைத்திறனுள்ள இளைஞர்களை நமது கல்வி அமைப்பு உருவாக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கிறது. எனவே நமது இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கு தனி மையங்கள் அமைப்பது, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்குச் சீர்திருத்த மையங்கள் அமைப்பது எனப் பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம், நமது இளைஞர்கள் சக்தியைக் காப்பாற்றியாக வேண்டும்.

அமைப்புசாராத் தொழில்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான எட்டு மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம், முறையான விடுமுறை இவையெல்லாம் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். 12 மணி நேர வேலை எனும் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பை அரசு மறந்துவிடக் கூடாது.

உண்மையில் திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் தொழிலாளர் இயக்கமேயாகும். தொழிலாளர்கள் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால் திராவிட இயக்கம் சாதி, வர்ணப் பாகுபாட்டை முன்னிறுத்தியது என்பது வரலாறு. எனவே ‘திராவிட மாடல்’ அரசின் சமூக நீதி என்கிற சொல் தொழிலாளர் உரிமைகளை எப்போதும் உள்ளடக்கியே ஒலிக்க வேண்டும்.

- எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்; தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in