Last Updated : 07 Mar, 2023 06:59 AM

 

Published : 07 Mar 2023 06:59 AM
Last Updated : 07 Mar 2023 06:59 AM

வடகிழக்கு: வளைக்கும் பாஜக, விழிக்கும் எதிர்க்கட்சிகள்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் நடந்துமுடிந்திருக்கும் தேர்தல்கள், பல சவால்களுக்கு மத்தியிலும் பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கின்றன. எதிர்மறையான சூழல்களுக்கு எல்லாவிதத்திலும் முகங்கொடுக்கும் பாஜகவின் உத்தி இந்த வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது.

மறுபுறம் பாஜகவுக்குச் சவாலாக இருந்த விஷயங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கில், பாஜகவின் இத்தகைய ஆதிக்கம், 2024 தேர்தலில் அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் வளர்ச்சி: 2014ஆம் ஆண்டுவாக்கில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில்கூட பாஜக ஆட்சியில் இல்லை; ஆனால், இன்றைக்கு அந்தப் பிராந்தியத்தில் அக்கட்சி வலுவாக வேரூன்றிவிட்டது. அதே 2014ஆம் ஆண்டுவாக்கில் ஐந்து மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், இன்றைக்கு ஒரு மாநிலத்தில்கூட சொல்லிக்கொள்ளும் விதத்தில் அங்கு இல்லை.

இந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் மொத்தமாகவே எட்டு இடங்களில்தான் அக்கட்சி வென்றிருக்கிறது; நாகாலாந்தில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்ற முடியவில்லை. திரிபுராவில் நீண்டகாலம் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி, 2018 தேர்தலுக்குப் பின்னர் அங்கு மீண்டெழவே முடியவில்லை. தாங்கள்தான் மாற்று எனும் முழக்கத்துடன் வந்த திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்திருக்கிறது.

அதேசமயம், பாஜகவும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுவிட்டதாகச் சொல்ல முடியாது. நாகாலாந்தில் மட்டும்தான் கடந்த தேர்தலைவிட (15.31%), இந்த முறை(18.81%) அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மேகாலயத்தில் கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் இரண்டே இடங்களில்தான் வென்றிருக்கிறது; இத்தனைக்கும் இந்த முறை 60 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியிருந்தது. திரிபுராவில் கடந்த முறை 43.59% வாக்குகளை வென்ற பாஜக, இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலும் அதன் வாக்கு சதவீதம் 38.97% ஆகக் குறைந்திருக்கிறது.

அரசியல் சாமர்த்தியம்? கூடவே, வடகிழக்கில் மாநிலக் கட்சிகள் வலுவடைந்துவருகின்றன. குறிப்பாக, திரிபுராவில் 2019இல் உருவான திப்ரா மோத்தா கட்சி முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 13 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதேவேளையில் மாநிலக் கட்சிகள் ஏதேனும் ஒரு விதத்தில் தங்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலையும் பாஜக உருவாக்கியிருக்கிறது.

பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்கும் மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியையே அதிக அளவில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதை அரசியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் பாஜகவுக்கு நிறையவே இருக்கிறது.

மோடி பிரதமரான பின்னர்தான் இந்தியா வளர்ச்சியடைகிறது எனும் தோற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவினர், வடகிழக்கிலும் அதே உத்தியைத்தான் பயன்படுத்துகின்றனர். இலவச ரேஷன் பொருள்கள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடங்கி மகளிர் பாதுகாப்பு வரை தங்கள் திட்டங்களையும்சாதனைகளையும் வாக்காளர்களிடம் தெளிவாக முன்வைக்கும் அணுகுமுறை அவர்களிடம் இருக்கிறது.

மறுபுறம், வடகிழக்கு மாநிலங்கள் சிறியவை என்பதால் அங்கு நடக்கும் தேர்தல்கள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் வெற்றிபெற்றாலும், அது வடகிழக்கு மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸை வெற்றிபெற வைக்கவில்லை. பாஜகவைப் போல வடகிழக்கில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்யவில்லை. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகம் வகுக்க முன்வரவில்லை.

ஆட்சியமைப்பதில் அக்கறை: இந்தத் தேர்தல்களில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பாஜகவின் வடகிழக்குத் தளபதியாக இருந்து செயல்பட்டுவந்தார். கட்சிக்குள்ளும் வெளியிலும் கருத்து வேறுபாடுகளைக் களையும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திரிபுராவில் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விப்லப் குமார் தேவின் ஆதரவாளர்களும், மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக்கின் ஆதரவாளர்களும் மாணிக் சாஹா மறுபடியும் முதல்வராவதை எதிர்க்கின்றனர். எனினும், கட்சி மேலிடம் மாணிக் சாஹாவையே தேர்ந்தெடுத்ததுடன், கட்சியினரிடம் அதை எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைக்கும் பொறுப்பையும் ஹிமந்தவுக்கு வழங்கிவிட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கோன்ராடு சங்மாவிடம் பேசி மீண்டும் மேகாலயத்தில் என்பிபி - பாஜக கூட்டணி அமைய பேச்சுவார்த்தையை ஹிமந்த தொடங்கிவிட்டார். “மத்திய அரசிடம் வாங்கிய நிதியை வைத்து சாலை போடுவது, மருத்துவமனை கட்டுவது என எதையும் கோன்ராடு சங்மா அரசு செய்யவில்லை” என்று தேர்தல் சமயத்தில் பேசிவந்தவர் இதே ஹிமந்த தான்.

ஆனால், தேர்தல் முடிவுக்குப் பின்னர் மத்திய அரசின் தயவு தேவையென்றால் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்கு மீண்டும் சங்மா வந்தாக வேண்டும் எனும் அழுத்தத்தை அவரால் கொடுக்க முடிந்திருக்கிறது. ‘நம்பர் 1 ஊழல் அரசு’ என அமித் ஷாவால் குற்றம்சாட்டப்பட்ட கோன்ராடு சங்மா அரசை ஆதரிக்க பாஜக முன்வருகிறது.

சங்கோஜமில்லாமல் இப்படிச் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது பாஜகவின் பலம். ஹிமந்தவும், திப்ரா மோத்தா தலைவர் பிரத்யோத் மாணிக்யாவும் ஒருகாலத்தில் காங்கிரஸில் இருந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

இனி என்ன? வழக்கம்போல தேர்தல் முடிவுகள் வெளியானதும் டெல்லி பாஜக தலைமையகத்தில் வெற்றி விழாவை விமரிசையாகக் கொண்டாடினார் பிரதமர் மோடி. அவரது சீரிய ஆட்சிதான் வடகிழக்கில் பாஜகவை வளர்க்கிறது எனப் புகழாரங்கள் சூட்டப்பட்டன.

மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த உற்சாகம் இனி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கலாம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் கைதுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியினர். ஆனால், இதை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக அணிதிரள அக்கட்சிகள் முயலவில்லை. எடுக்கப்படும் மிகச் சில முயற்சிகளிலும் போதிய வலு இல்லை.

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியாவையும் ராகுலையும் அமலாக்கத் துறை விசாரித்ததை ஆம் ஆத்மி கட்சி கண்டிக்கவில்லை என்பதால், மணீஷ் சிசோடியாவின் கைதை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை என விமர்சிக்கப்படுகிறது.

இதோ, இப்போதுகூட மத்திய விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் எழுதிய கூட்டுக் கடிதத்தில் காங்கிரஸின் கையெழுத்து இல்லை. இதை வைத்து ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸைச் சாடுகிறது. ஆனால், கையெழுத்து கேட்டு தங்களை யாரும் அணுகவில்லை என காங்கிரஸ் கூறுகிறது.

ஒருகாலத்தில் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்டு இந்திரா காந்தியின் அரசை வீழ்த்தியதுபோல, இன்றைக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஒரு பெரிய தலைவர் இல்லை.

பாஜக ஆட்சிமீது மக்களிடையே கடும் கோபம் இருக்கிறது என்று பேசும் ராகுல் காந்தியால், தனது நடைப்பயணத்தின் மூலம் பிற கட்சியினரை ஒன்றுசேர்க்க முடியவில்லை. இதே நிலை நீடிப்பது, வடகிழக்குத் தேர்தல் முடிவுகளை மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு நீட்டித்துவிடலாம் என்று எண்ணத் தோன்றுகிறது!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x